புதுடெல்லி: உள்நாட்டு பாதுகாப்பில் மத்திய ரிசர்வ் காவல் படையானது மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. 3.25 லட்சம் வீரர்களுடன் இயங்கி வரும் இதில், பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. அடர்ந்த காடுகளில் பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகள், கிளர்ச்சியாளர்களைக் கையாள ‘கோப்ரா’ என்ற படைப்பிரிவும் அதில் ஒன்று. தற்போது, 12 ஆயிரம் வீரர்கள் இதில் உள்ளனர். இந்த கோப்ரா பிரிவில் இனி பெண் வீரர்களும் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய ரிசர்வ் காவல் படையின் இயக்குநர் ஏ.பி.மகேஸ்வரி கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘கோப்ரா படைப்பிரிவில் பெண் வீரர்களை சேர்க்க திட்டமிட்டு வருகிறோம். வனத்துறை தொடர்பான பாதுகாப்பில் ஈடுபட வேண்டிய இப்பிரிவில் பணியாற்ற உடல் உறுதியுடன், மன உறுதியும் நிச்சயம் தேவை. எனவே, இதன் அடிப்படையில் பெண் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நக்சலைட்டுகளால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கும், கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கும் இவர்ள் அனுப்பப்படுவார்கள்’,’ என்றார்.