×

பதவி கிடைக்காத அதிருப்தியாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு? தமிழக காங்கிரசில் 2ம் கட்ட மினி பட்டியல் தயார்

சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மெகா பட்டியலில் பதவி கிடைக்காத குறிப்பிட்ட சிலருக்கு பதவி வழங்கும் வகையில் தமிழக காங்கிரசில் மினி பட்டியல் ஒன்று தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.   தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினர் தங்களது நிர்வாகிகளை தீவிர அரசியலில் இறக்கி வருகின்றனர். இதற்காக தமிழக காங்கிரசில் புதிய நிர்வாகிகளை கொண்ட மெகா பட்டியல் வெளியிடப்பட்டது. புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மெகா பட்டியலில் கோஷ்டி தலைவர்களின் முக்கிய நிர்வாகிகள் பலர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. தங்கள் ஆதரவு தலைவர்களிடம் இதுபற்றி தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

 இதனால் கோஷ்டி தலைவர்களும் அவர்களை திருப்திபடுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் முறையிட்டுள்ளனர். இதனால் கடும் அதிருப்தியில் இருப்பவர்களுக்கு முக்கிய பதவிகளை அளிக்கும் வகையில் மீண்டும் ஒரு மினி பட்டியல் தயாராகி வருகிறது. இந்த பட்டியலுக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மூலம் டெல்லி தலைமையில் ஒப்புதல் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதிருப்தியில் இருப்பவர்கள் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கையில் காங்கிரஸ் தலைமை இறங்கியுள்ளதாக கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.  எனவே டெல்லி தலைமை ஒப்புதல் கிடைத்த பின்பு இந்த மினி பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தமிழக காங்கிரசார் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : dissidents ,Tamil Nadu ,Congress , Opportunity again for dissidents who did not get the post? 2nd phase mini list ready in Tamil Nadu Congress
× RELATED மோடி போன்ற காந்தியின் வரலாறு...