திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பையனூரை சேர்ந்தவர், உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி (98). ஏராளமான மலையாள படங்களில் நடித்த அவர், தமிழில் சந்திரமுகி, பம்மல் கே.சம்பந்தம், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பையனூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர், இரு தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல்நிலை மோசமானது. மீண்டும் பையனூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணம் அடைந்தார். உன்னி கிருஷ்ணன் நம்பூதிரியின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.