தொடர் மழை ஓய்ந்ததால் கருவாடு உலர்த்தும் பணி மும்முரம் -விலை போகாததால் வியாபாரிகள் வேதனை

அதிராம்பட்டினம் : அதிராம்பட்டினம் பகுதியில், மழை ஓய்ந்ததால் கருவாடு உலர்த்தும் பணி மும்முரமாக நடக்கிறது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை துறைமுக பகுதியில் கருவாடு வியாபாரிகள் மீன்களை ஏலத்துக்கு எடுத்து, அதனை உப்பு தண்ணீரில் ஊற வைத்து பெண் தொழிலாளர்கள் உதவியுடன் வெயிலில் உலர்த்துகின்றனர்.

பின்னர் அதனை பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி, மதுக்கூர் ஆகிய பகுதி மார்க்கெட் மற்றும் சந்தை பகுதிகளுக்கு கொண்டு சென்று மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக பெய்த தொடர் மழையால் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த கருவாடுகளை முற்றிலும் மழைநீர் சூழ்ந்து சேதமானது. இதனால் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் தற்போது மழை சற்று குறைந்து வெயில் அடிக்க துவங்கியதால் அதிராம்பட்டினம் பகுதி தொழிலாளர்கள் கருவாடுகளை வெயிலில் உலர்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி கருவாடு மீன் வியாபாரி மீனாம்பாள் கூறுகையில், அதிராம்பட்டினம் பகுதியில் மீன்களை ஏலத்துக்கு எடுத்து, அதை வெயிலில் காயவைத்து மீன் கருவாடாக சந்தைகளில் விற்று வருகிறோம். தொடர் மழையால் 30 ஆயிரம் மதிப்புள்ள கருவாடுகள் வீணாகிப் போனது. நல்ல கருவாடாக இருந்தால் கிலோ 80ரூபாய்க்கு விலை போகும் நிலையில், தற்போது மழையில் வீணாகி போனதால் கிலோ 15 ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது. வீணாகி போன கருவாடுகள் கோழித் தீவனத்திற்காக நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Related Stories:

>