×

நிவர், புரெவி, தொடர்மழையால் டெல்டாவில் 13.48 லட்சம் ஏக்கர் பயிர் நாசம்-விவசாயிகள் வேதனை

திருச்சி : நிவர், புரெவி, தொடர்மழையால் டெல்டா மாவட்டத்தில் 13.48 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசமானதாக வேதனையுடன் தெரிவிக்கும் விவசாயிகள் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.டெல்டா மாவட்டத்தில் இந்தாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் சம்பா தாளடி பயிர்கள் 11 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் இறுதியில் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பயிர்கள் தற்போது அறுவடைக்காகவும், பால்பிடிக்கும் பருவத்திலும் இருந்து வருகிறது.

இதேபோல் பருத்தி, மக்காசோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. வடகிழக்கு பருவ மழை தவறி பெய்ததாலும், நிவர், புரெவி புயல் மற்றும் தொடர் மழையால் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி நெற்பயிர், மக்காசோளம், பருத்தி என 13.48 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான 3.50 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 2.60லட்சம் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. திருவாரூர் மாவட்டத்தில் 3.77லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 2லட்சத்து 37 ஆயிரத்து 977 ஏக்கர் பாதிக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 85,000 ஏக்கரில் அறுவடை செய்ய முடியாமல் கதிர்கள் சாய்ந்தும்,அழுகியும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர 25,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மக்காசோளம், உளுந்து, பயறு, எள் போன்ற பயிர்களும் முழுமையாகவே அழுகிவிட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் 83 ஆயிரம் ஏக்கரும், பருத்தி 11 ஆயிரம் ஏக்கர், சம்பா 4,400 ஏக்கர், சின்ன வெங்காயம் 4,400 என ஒரு லட்சத்து 2ஆயிரத்து 800 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 51,525 ஏக்கர் சம்பா பயிர் சாய்ந்து முளைத்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 6ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சாய்ந்து சேதமடைந்தது.

திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் 15 ஆயிரம் ஏக்கர் சம்பா, 65 ஆயிரம் ஏக்கர் பருத்தி, மக்காச்சோளம், 3500 ஆயிரம் ஏக்கர் சின்ன வெங்காயம், 4 ஆயிரம் ஏக்கரில் சோளம், கம்பு, துவரை பயிர்களும், 2 ஆயிரத்து 500 ஏக்கர் கடலை பயிர்கள், 1067 ஏக்கர் காய்கறிகள், 13 ஏக்கரில் பூக்கள் என 91,080 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் , புரெவி புயல் சேதங்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்தியகுழு பார்வையிட்டு சென்றது. வருவாய்த்துறை, வேளாண்மைத்துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சேத விபரங்களை கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு ₹20 ஆயிரம் அறிவித்தார். ஏக்கருக்கு ₹32.500 நிவாரணமாக வழங்க வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர்கள் கூறுகையில், நிவர், புரெவி, கனமழை என அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் காவிரி டெல்டா மாவட்டத்தில் 13.48லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகளின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது போல், விளைந்த நெல்லை கரைசேர்க்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் டெல்டா மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க பிரதமரிடம், தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும். ஏக்கருக்கு ₹32 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இல்லை என்றால் இதன் எதிரொலி வரும் சட்டமன்ற தேர்தலில் வெளிப்படும் என்றனர்.

Tags : delta , Trichy: Nivar, Purevi, 13.48 lakh acres of crops damaged in delta district due to continuous rains
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை