×

சின்னசேலம் ஏரியில் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவுகள்-தொற்று நோய் பரவும் அபாயம்

சின்னசேலம் : சின்னசேலம் நகரத்தின் மையப்பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி கோமுகி அணை கால்வாய் மற்றும் மயூரா நதியில் இருந்து வரும் நீரால் நிரம்புகிறது. இந்த ஏரி மூலம் சின்னசேலம் நகர பகுதி மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சின்னசேலம் ஏரி கோடி ஓடி பெத்தானூர், ஈசாந்தை உள்ளிட்ட 10 கிராம விவசாயிகளும் பயன் பெறுகின்றனர்.

சின்னசேலம் ஏரிக்கு கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொழியாததால்  கோமுகி அணையில் நீர் வரத்து இல்லை. இதனால் சின்ன
சேலம் ஏரி வறண்டு காணப்பட்டதுடன், குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டது. சின்னசேலம் ஏரி வறண்டு போய் இருந்த சமயத்தில் சின்னசேலம் பகுதியை சேர்ந்த சில சமூக விரோதிகள் ஏரியில் சாம்பலை கொட்டுவது, இறைச்சி கழிவுகளை கொட்டுவது, குப்பைகளை கொட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது சின்னசேலம் ஏரிக்கு கோமுகி அணை நீர்வரத்து உள்ளது. இதனால் ஏரி நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. இதனால் ஏரியில் கொட்டிய குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் நீரில் மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஏரி நீர் மாசுபடுவதுடன், சுற்றுப்புற சுகாதாரமும் மாசுபடுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

தற்போது சிலர் இறைச்சி கழிவுகளை ஏரியில் கொட்டி விட்டு செல்கின்றனர். சின்னசேலம் ஏரியில் 2 குடிநீர் கிணறுகள் உள்ளதால் குடிநீரும் மாசுபட வாய்ப்பு உள்ளது. ஆகையால் சின்னசேலம் பேரூராட்சி நிர்வாகம் ஏரியில் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஏரி கரையில் கொட்டிய கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Chinnasalem Lake , Chinnasalem: Chinnasalem has a large lake in the heart of the city. The lake is filled with water from the Gomukhi Dam Canal and the Mayura River.
× RELATED சின்னசேலம் ஏரிக்கு கோமுகி அணை நீர் வர பொதுப்பணித்துறை நடவடிக்கை தேவை