கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்

திருமலை: ஆந்திராவில் கோயில் மற்றும் சிலைகளை சேதப்படுத்தியதாக பாதிரியார் கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்து கோயில்களில் இருக்கும் சிலைகள், கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேர் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதன் உச்சகட்டமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ராமதீர்த்தம் கோதண்டராமர் சிலையின் தலை உடைக்கப்பட்டு வேறொரு இடத்தில் வீசப்பட்டது. இந்த சம்பவத்துக்கு தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுவரை மெத்தனமாக இருந்த ஆந்திர அரசு, சிலை உடைப்பு மற்றும் தேர் எரிப்பு சம்பவங்களை கண்டித்தது. மேலும் இதுகுறித்து சிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக போலீசார் மாநிலம் முழுவதும் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். இதுதொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 15 பேர் தெலுங்கு தேசம் கட்சியினர் என்றும் 7 பேர் பாஜகவினர் என்றும் டிஜிபி கவுதம்சவாங் தெரிவித்தார்.

இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடாவைச் சேர்ந்த பாதிரியார் சக்ரவர்த்தி என்கிற பிரவீன் சக்ரவர்த்தியை காக்கிநாடா போலீசார் நேற்று கைது செய்தனர். பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘காசிப்’ எனும் யூடியூப் சேனலில் சக்ரவர்த்தி சிலநாட்களாக தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக போலீசார் கூறினர். இதில் பிரவீன்சக்ரவர்த்தி பேசியுள்ள வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில், ‘Sylom Blind Centre’ என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வரும் பிரவீன் சக்கரவர்த்தி, அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று மதமாற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் தானும் தனது சக மத போதகர்களும் ஆந்திராவில் பிற மதத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி வருவதாகவும், அவ்வாறு ஒரு கிராமத்தில் உள்ள அனைவரையுமே மாற்றி விட்டால் அதற்கு ‘கிறிஸ்து கிராமம்’ என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார்.

இந்த வீடியோ கடந்த 2019ம் ஆண்டே சமூக ஊடகங்களில் வைரலானது. அப்போது ஒரு தன்னார்வ அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பிரவீன் சக்கரவர்த்தி குறித்து புகார் அனுப்பியது. இந்த வருடம் வெளிநாட்டு நன்கொடையாளரிடம் பிரவீன் பேசும் வீடியோ ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டது. அதில் தன்னுடன் 3,642 மதபோதகர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், இதுவரை 699 ‘கிறிஸ்து கிராமங்களை’ ஏற்படுத்தி உள்ளதாகவும் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொட ர்ந்து குண்டூரைச் சேர்ந்த சிங்கம் லட்சுமி நாராயணா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிஐடி போலீசார் கோயில்களை சேதப்படுத்தியதாக பிரவீனை கைது செய்துள்ளனர். இவர் மீது மதக்கலவரம் உண்டாக்க முயன்றதாக 6 பிரிவுகளின் கீழ் சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: