தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஞானதேசிகன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி: பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம்

சென்னை: தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு பெசன்ட்நகரில் உள்ள மின் மாயனத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.

அதன்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா.பாண்டியராஜன் மற்றும் முன்னாள் எம்.பி ஜெயவர்தன், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ். இளங்கோவன், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கோபண்ணா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதைப்போன்று கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்தனர். மேலும் தற்போது கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடித்து சமூக இடைவெளியுடன் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>