உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம்: இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து WHO ட்விட்டரில் பதிவு..!

ஜெனீவா: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்ததையடுத்து, நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. மேலும், முதல் கட்டமாக கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், இந்த தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்தார்.

இதனையடுத்து, முதற்கட்டமாக 3 கோடி பேருக்கும், 2வது கட்டத்தில் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடும் இந்த மிகப்பெரிய திட்டத்தை அறிமுகம் செய்ததற்கு இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அலுவலகம் தரப்பில் ட்விட்டர் பதிவில் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>