கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது : திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை:விசிக தலைவர் திருமாவளவன்் வெளியிட்ட அறிக்கை: நாடெங்கும் துவங்க இருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில், கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகிய முன்களப் பணியாளர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவுசெய்யாத நிலையில் உள்ளதால், அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த ஐயம் மருத்துவர்களாலும், அறிவியல் அறிஞர்களாலும் எழுப்பப்படுகின்றன. அதற்கு எந்த ஒரு விளக்கத்தையும் இதுவரை மத்திய அரசு தரவில்லை.

கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு பாதிப்பு நேர்ந்தால் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அது இதுவரை வழங்கப்படவில்லை. எனவே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும் எவருக்கேனும் பக்க விளைவு ஏற்பட்டால் அதற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். தற்போது 10 பேருக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி மருந்து ஒரே பாட்டிலில் அடைத்து அனுப்பப்படுகிறது.

இந்த மருந்தை திறந்தால் மூன்று மணிநேரத்துக்குள் அதைப்பயன்படுத்தி விட வேண்டும், இல்லாவிட்டால் அது காலாவதி ஆகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மருந்தைப் பயன்படுத்தும் நேரத்தில் மருந்து ஏராளமாக வீணாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, ஊசியுடன் கூடிய ஒரு டோஸ் மருந்தை தனித்தனியே வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் இந்த ஊசியைப் போட்டுக்கொள்பவர்களுக்குப் பாதுகாப்பாக அமையும்.இவ்வாறு திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>