காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தடுப்பூசி வினியோகம் இன்றுடன் முடிகிறது: 55 லட்சம் கோவாக்சினும் அனுப்பப்பட்டது

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகளை நாடு முழுவதும் வினியோகிக்கும் பணி இன்றுடன் முடிகிறது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை. கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியையும், பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் இணைந்து உள்நாட்டில் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியையும், கொரோனா நோய் அவசர காலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இவற்றை 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு வழங்குவது, நாளை மறுதினம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்நிலையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 1.1 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியையும், 55 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியையும் வினியோகிக்கும் பணி இன்று மாலையுடன் முடிகிறது.

55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை, கனாவரம், கவுகாத்தி, பாட்னா, டெல்லி, குருஷேத்ரா, பெங்களூரு, புனே, புவனேஸ்வர், ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ உள்ளிட்ட 11 நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. அதே போல், மும்பை, புனே, ஐதாராபாத்தில் இருந்து 56 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஸ்ரீநகர், ஜம்மு, கான்பூர், கோரக்பூர், ஜபல்பூர், ராஞ்சி, ராஜ்கோட், டெல்லி, பெங்களூரு உள்பட நாட்டில் உள்ள 13 நகரங்களுக்கு வினியோகிக்கப்பட்டு அங்கிருந்து பிரித்து அனுப்பப்படுகிறது. தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி வரும் 16ம் தேதி தொடங்கி வைக்கிறார். அப்போது, காணொலி மூலம் சுகாதாரப் பணியாளர்களுடன் அவர் உரையாட இருக்கிறார்.

Related Stories:

>