×

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மேலும் 3 மாவட்டங்களில் நடத்த தமிழக அரசு அனுமதி..!!

சென்னை: சேலம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமர்சியாக ஆராவாரத்துடன் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இப்போட்டியை நடத்த தமிழக அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுடன் இந்த போட்டியை நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை, மாடுகள் முன்பதிவு, வாடிவாசல் அமைப்பு என அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில் சேலம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை சமயபுரம் அருகேயுள்ள கே.ராயபுரத்திலும், சேலம் ஆத்தூர் அருகே கூலமேட்டிலும், ஜல்லிக்கட்டு நடத்தலாம். இதேபோல் திருச்சி திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2016ல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், 2017ம்ஆண்டு தடை நீக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Government ,Tamil Nadu ,Jallikaddai ,districts ,Tamils , Salem, Pudukottai, Trichy, Jallikattu, Permission, Government
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து