×

தொடர் மழையால் பொங்கல் விற்பனை மந்தம் மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவு

நெல்லை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (14ம் தேதி) கொண்டாடப்படுகிறது. வரும் 15ம் தேதி மாட்டுப் பொங்கல் தினத்தை ஒட்டி கரிநாளாக கருதி ஆடு, கோழி பலியிட்டு அசைவ விருந்து படைத்து பொதுமக்கள் விருந்து உண்பது வழக்கம். இதையொட்டி ஆடு, கோழிகள் விற்பனை களை கட்டும். நெல்லை அருகே மேலப்பாளையத்தில் நேற்று கால்நடை சந்தையில் பொங்கல் பண்டிகைக்கான ஆடுகள் விற்பனை நடந்தது.

ஆண்டுதோறும் பொங்கலை ஒட்டிய செவ்வாய்கிழமைகளில் வியாபாரம் சந்தையில் களை கட்டும். ஆனால் இவ்வாண்டு தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நேற்று சந்தை சுற்றுப்பகுதி முழுவதும் சகதி காடாக காட்சியளித்தது. 2 ஆயிரத்திற்கும் குறைவான ஆடுகள் மட்டுமே சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. கிடைகளில் ஆடுகளை அடைத்துவிட்டு வியாபாரிகள், மழையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி ஒதுங்கிக் கொண்டனர். பொதுமக்களிடம் பேரம் பேசி விலையை நிர்ணயித்த பின்னர், அவர்கள் விரும்பும் ஆடுகளை கொடுத்தனர்.

சந்தையில் வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகளின் வரத்து அதிகம் காணப்பட்டது. குறும்பை, நாட்டு வகை வெள்ளாடுகளும், 6 ரக செம்மறி ஆடுகளையும் வியாபாரிகள் சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். இருப்பினும் மழை காரணமாக விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. நாட்டுக் கோழிகள் விற்பனைக்கு அதிகளவில் வந்த நிலையில், மழை காரணமாக அவை திருப்பி அனுப்பப்பட்டன.

மேலப்பாளையம் சந்தைக்கு பொங்கலையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும். இவ்வாண்டு தென்மாவட்டங்களில் காணப்படும் மழை காரணமாக அவற்றின் வரத்து தடைப்பட்டது. கிராமங்களில் இருந்து வந்திருந்த ஆட்டு வியாபாரிகளும், கசாப்பு கடைக்காரர்களும் மட்டுமே ஆடுகளை தேர்வு செய்து வாங்கிச் சென்றனர்.

ஒரு ஆட்டின் விலை ரூ.7 ஆயிரத்தில் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. குறிப்பாக 10 கிலோ முதல் 15 கிலோ எடை கொண்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்தது. மழை காரணமாக பொங்கல் விற்பனை கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆட்டுச்சந்தையில் பத்தமடை, சேரன்மகாதேவி உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்தவர்கள் நான்கைந்து பேர்களாக சேர்ந்து லோடு ஆட்டோக்களை வாடகைக்கு அமர்த்தி சந்தைக்கு வந்து மொத்தமாக ஆடுகளை வாங்கிச் சென்றனர். கனமழை காரணமாக விற்பனையாகாத ஆடுகளை வேனில் ஏற்றி வியாபாரிகள் வீடு திரும்பினர்.

Tags : Melappalayam , Nellai: Tamil Thirunalam Pongal festival is celebrated tomorrow (14th). On the 15th, on the occasion of Cow Pongal
× RELATED மேலப்பாளையம் கால்நடை சந்தையில்...