×

பண்டிகை காலங்களில் குற்றசம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு அவசியம்: உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை அறிவுரை

பெங்களூரு: பண்டிகை காலங்களில் சமூக குற்றங்கள் அதிகம் நடக்கும். அந்த சமயத்தில் போலீசார் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவுரை வழங்கினார். கர்நாடக மாநில போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது அவர் பேசியதாவது, ``மக்களின் நலனுக்காக உலகில் தகவல் தொழில்நுட்ப வசதி வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வேகத்திற்கு குற்றங்களும் அதிகம் நடக்கிறது. சமூக விரோதிகள் தொழில்நுட்பத்தை தங்களின் குற்ற செயலுக்கு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு கைதுசெய்வதற்கு போலீசாரும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.  நமது அரசியலமைப்பு சட்டத்தில் எந்த குற்றவாளியும் தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது, அதே சமயத்தில் நிரபராதிகள் தண்டிக்கப்படவும் கூடாது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்த ஜனநாயக வாதம் பலமாக செயல்பட வேண்டுமானால், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கும் வகையில் போலீசாரின் விசாரணை இருக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மேலும் போலீசாரின் வசதிக்காக அரசாங்கம் செய்து கொடுத்து வரும் சலுகைகளுக்கும் அர்த்தமிருக்கும். சமீபத்தில் மாநிலத்தில் நடந்த பல குற்ற சம்பவங்களை விசாரணை நடத்தும் பொறுப்பு சிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி உங்களிடம் ஒப்படைக்கிறோம்.

அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை என்பதை நினைத்து செயல்பட வேண்டும்.  போலீசாரின் பணி சாமானியமானதல்ல. அது பெரிய சவாலானது என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, எதிர்கட்சிகளுக்கும் தெரியும். உங்கள் திறமையை கால சூழலுக்கு ஏற்ப காட்டுங்கள். பெங்களூரு உள்பட மாநகரங்கள், நகர பகுதிகளில் பண்டிகை காலங்களில் அதிகம் குற்ற சம்பவங்கள் நடக்கிறது. குடும்பத்தினருடன் கோயில், சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது, வீட்டில் யாருமில்லாத சமயத்தில் நுழைந்து கொள்ளை அடிப்பது, பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க வெளியில் வரும்போது பிக்பாக்கெட் அடிப்பது உள்பட சம்பவங்கள் நடக்கும். திடீரென தகராறுகளில் மோதல் ஏற்படும். இதுபோன்ற சமயத்தில் போலீசார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதாக தெரியவருகிறது.



Tags : seasons ,Basavaraj , Awareness needed to prevent crime during festive seasons: Home Minister Basavaraj Puppet Advice
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...