பெங்களூரு: பெட்ரோல், டீசல் விலை மட்டும் இன்றி சமையல் கியாஸ் விலை உயர்வு சாதாரண மக்களை பாதிக்கிறது என்பதால் உடனடியாக விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாராயணசாமி வலியுறுத்தினார். இது தொடர்பாக மஜத மாநில பொது செயலாளர் நாராயணசாமி கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று சாதாரண மக்களின் வாழ்வில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஏழை எளிய மக்கள் மிகவும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை நாள் தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு பெட்ரோல், டீசல் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இப்போது சமையல் கியாஸ் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் செலுத்துகிறது. அதே நேரம் மற்றொரு வகையில் அதாவது பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தி அதை வசூலித்து விடுகின்றனர்.
கொரோனா பாதிப்பு இன்னும் நீங்காத நிலையில் சாதாரண மக்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றது முதல் இதுவரை அரசு நிர்வாகம் மந்தமாகவே செயல்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு இது வேகம் பிடித்தால் மக்களுக்கு அதனால் நன்மை ஏற்படும். பெங்களூரு மாநகராட்சி புதிய சட்டம் அமலுக்கு வந்தாலும் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது இதுவரை தெரியவில்லை. பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் மஜத கூடுதல் இடங்களில் பெற்றி பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.