பெண்கள், குழந்தைகள் திடீர் போராட்டம் நாகர்கோவிலில் ஆக்ரமிப்பு வீடுகள் இடிப்பு: காலி செய்ய 21ம் தேதி வரை அதிகாரிகள் கெடு

நாகர்கோவில்: நாகர்கோவில் பறக்கின்கால் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 150 குடும்பத்தினர் 50 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர். அந்த இடத்தில் ஆக்ரமிப்புகளை அகற்றப்போவதாக பொதுப்பணித்துறை அறிவித்தது. இதையடுத்து அங்கு தங்கி உள்ளவர்களுக்கு அஞ்சுகிராமம் அருகே மாற்று இடம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.மாற்று இடத்துக்கு செல்ல ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. கூலி வேலை செய்யும் எங்களால் அந்தளவு பணம் செலவிட முடியாது. எனவே வீடுகளை காலி செய்ய எங்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் என்று  மக்கள் கூறினர். இந்த நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபிகள் கொண்டு வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கினர்.

இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கொட்டும் மழையில் வீடுகள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்தனர். அவை மழையில் நனைந்தன. பெண்களும், குழந்தைகளும் மழையில் நனைந்தபடி நின்றனர். இதையடுத்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென வீடுகளை இடிப்பதால் எங்களால் வேறு இடத்திற்கு செல்ல முடியாது. போதிய கால அவகாசம் தரவேண்டும் என கூறி பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வீடுகளுக்குள் அமர்ந்து கொண்டனர். இதையடுத்து கோட்டார் போலீசார் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களுக்கு போதிய அவகாசம் தரமால் வீடுகளை திடீரென இடிப்பதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து வரும் 21ம் தேதி வரை அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறி அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பறக்கின்கால் பகுதியில் இன்று காலை பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>