×

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட் பழுது: வாகன ஓட்டிகள் கடும் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகேயுள்ள சிங்கபெருமாள் ரயில் நிலைய கேட் நேற்று எதிர்பாராதவிதமாக பழுதடைந்தது. இதன் காரணமாக, பணிக்கு செல்வோர், மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு போவோர் மற்றும் தனிப்பட்ட வேலைக்காக செல்பவர்கள் என பல தரப்பினர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாயினர். இது குறித்து, தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பொறியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பழுதடைந்த ரயில்வே கேட்டை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால், அப்பழுதை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. எனவே, ஒரு பகுதி கேட்டை தற்காலிகமாக அகற்றினர். இதனால்  2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து, சிங்கபெருமாள்கோயில் பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், ‘‘தொழில்நுட்ப கோளாறு அடிக்கடி ஏற்படுகின்றது. இது குறித்து, பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினமும், இப்பகுதி வழியாக, வேலை மற்றும் சொந்த வேலைக்காக செல்பவர்கள், மருத்துவமனைக்கு போவோர் என  பலதரப்பினர் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன்,பஸ் எனப் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.  மேலும், அருகில் உள்ள பல்வேறு கம்பெனிகளுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் இந்த ரயில்வேகேட்டை கடந்து  செல்கின்றன.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே, மின்சார மற்றும் தென்மாவட்ட விரைவு ரயில்கள் செல்வதற்கு 10 நிமிடத்திற்கு ஒருமுறை இந்த கேட்  மூடப்படுகிறது. ஒரு சில நேரங்களில் ரயில்வே கேட் பழுது அடைகின்றது. இதனால், வாகனஓட்டிகள் பல மணிநேரம் காத்து கிடக்கவேண்டிய அவல நிலை தொடர்கிறது. ரயில்வேகேட்டை கடப்பதற்கு மக்கள் அவதிப்படுவதை தவிர்க்கும் நோக்கில், ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணி கடந்த 10ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ரயில்வேகேட்டை கடந்து செல்ல மிகுந்த  சிரமப்படும் நிலை தொடர்கிறது’’ என்றனர்.

Tags : Singaperumal ,Motorists , Singaperumal temple railway gate repair due to technical glitch: Motorists suffer severely
× RELATED சிங்கபெருமாள் கோவிலில் ஆட்டோ...