×

பிடிவாதத்தை கைவிட்ட ட்ரம்ப் : அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு அறிக்கை வெளியிட்டார் டொனால்ட் ட்ரம்ப்!!

வாஷிங்டன் : ஜோ பைடனின் வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றார். இவர் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், இவரது வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாததால் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. ஆனால் அவரது ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர். இதில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். இதற்கிடையில், ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வு கூடியது. அப்போது, ஜோ பிடனை அதிபராக அறிவிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், கைகளில் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டு கொண்டு, தடுப்புகளை கீழே தள்ளிவிட்டும் உடைத்து கொண்டும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இருப்பினும் துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், ஜோ பிடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி என அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பிடனை அதிபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றிய கையேடு, வெற்றியை அங்கீகரித்து ஜோ பிடனுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முடிவுகளில் எனக்கு முற்றிலும் உடன்படவில்லை. இருந்தாலும் கூட ஜனவரி 20 அன்று நானாகவே முன்வந்து அதிபர் பதவியில் இருந்து வெளியேறுவேன்.அன்றைய தினம் ஒழுங்கான முறையில் ஜோ பைடனிடம் அதிகாரம் மாற்றப்படும். இது ஜனாதிபதி வரலாற்றில் எனது முதல் பதவி காலத்தின் முடிவைக் குறிக்கும் அதே வேளையில், அமெரிக்காவை மீண்டும் பெரியதாக்குவதற்கான எங்கள் முதற்கட்ட போராட்டம் தான் இது, என்று தெரிவித்துள்ளார்.


Tags : Donald Trump ,defeat ,election ,US , US presidential election, defeat, statement
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...