×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 14ல் மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு: அவனியாபுரத்தில் ஏற்பாடுகள் ஜரூர் காளைகள், ‘காளையர்’ தீவிர பயிற்சி

அவனியாபுரம்: தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு, வருகிற 14ம் தேதி அவனியாபுரத்தில் நடக்கிறது. மறுநாள் (ஜன. 15) பாலமேடு, ஜன. 16ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்காக காளைகள், காளையருக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.   மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு தைப்பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. ‘தென்கால் பாசன விவசாயிகள் சங்கம்’ மூலம் இந்த ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டபோது, அனைவரும் ஒன்று திரண்டு போராடி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றனர். இதைத்தொடர்ந்து, அவனியாபுரம் பொதுமக்கள், தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்துடன் சேர்ந்து தங்களையும் ஜல்லிக்கட்டு கமிட்டி குழுவில் உறுப்பினராக்கும்படி கோரினர். இதன்பேரில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே ஏற்று நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு, கடந்த 2 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஓய்வுபெற்ற நீதிபதியின் கீழ் ஒரு குழுவாக அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மேலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கும் நிலையிலும், உற்சாகத்திற்கு குறைவில்லை. 300 வீரர்களுக்கே அனுமதி, காளைகளுக்கும் கட்டுப்பாடு போன்றவை காளை வளர்ப்போருக்கு கவலை அளித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூடுதலாக மாடுபிடி வீரர்கள், காளைகளை அனுமதிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.  இது ஒருபுறமிருக்க, ஜல்லிக்கட்டு போட்டி நெருங்கி வரும் நிலையில், களம் காண்பதற்கென காளைகள் தயாராகி வருகின்றன. இதற்கென காளைகளுக்கு தினமும் மிக சத்தான உணவு வகைகளான கம்பு, தினை, பச்சரிசி, வெல்லம், நாட்டுக்கோழி முட்டை என வழங்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று இளைப்பு வராமல் போராட நீச்சல் பயிற்சியும், நடைபயிற்சியும் மாடுபிடி வீரர்களை எதிர்த்து நின்று அவர்களை தூக்கி வீசுவதற்கு மணல் குவித்து அதை குத்தி தூக்கி எறியும் பயிற்சியும் தினந்தோறும் காளை வளர்ப்போர் வழங்கி வருகின்றனர். ஊட்டச்சத்து உணவுக்காகவே தினமும் ரூ.700 முதல் ரூ.1000 வரை செலவு செய்து வருகின்றனர். காளைகளை அடக்க இளைஞர்களும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். பங்கேற்கும் காளைகளின் புகைப்படத்தை இணைத்து, தகவல்களும் தரக்கோரி நேற்று காளை வளர்ப்போருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பார்வையாளர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘அவனியாபுரம் பகுதியில் பார்வையாளர்கள் அதிகளவு அமர்ந்து பார்த்திட உதவும் வகையில் நிரந்தர ஜல்லிக்கட்டு திடலை உருவாக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : festival ,Pongal ,Jan ,Madurai ,Avanyapuram Jarur , On the eve of Pongal festival, Jan. Madurai's first jallikattu on the 14th: = Arrangements at Avanyapuram must = bulls, ‘bulls’ intensive training
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா