×

சிறுபான்மையினருக்கும் திமுகவுக்கும் இருப்பது தொப்புள் கொடி உறவு: தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் திமுக தலைமையிலான நல்லாட்சி அமைந்திடும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சிறுபான்மையினருக்கும் திமுகவுக்கும் இருப்பது தொப்புள் கொடி உறவு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக சிறுபான்மை அணி சார்பில், ‘நல்லாட்சி மலர இதயங்களை இணைப்போம்’ என்ற பெயரில் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு, திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாநில செயலாளர் மஸ்தான் முன்னிலை வகித்தார்.

திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர் பொன்முடி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட தலைவர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, தா.வேலு, சிற்றரசு, திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர் செஞ்சி மஸ்தான், அப்துல் வகாப் மற்றும் சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு மாநில துணை செயலாளர்கள் எல்.எஸ்.எஸ்.மோகன், அடையார் ஷபீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிக்கோ இருதயராஜ், முன்னாள் எம்எல்ஏ அபுபக்கர், முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான், நவாஸ்கனி எம்பி, பாத்திமா முஷரப் உட்பட பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நல்லாட்சி மலர்ந்து விடக்கூடாது என்று நினைக்கும் சிலர் தான் இந்த நாட்டு மக்களைப் பிரிக்கிறார்கள். இதயங்கள் இணைந்துவிடக் கூடாது என்று நினைக்கும் சிலர்தான் நல்லாட்சி மலர்ந்து விடக்கூடாது என்று தடுக்கவும் சதித்திட்டம் போடுகிறார்கள். இந்தக் கூட்டத்தின் வாயிலாக இதயங்கள் இணைந்துவிட்டது என்பதை நீங்கள் சுட்டிக் காட்டிவிட்டீர்கள். இன்னும் நான்கு மாதத்தில் நல்லாட்சி மலர்ந்துவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகி விட்டது.

இன்றைக்கு பக்தியை வியாபாரப் பொருளாக, அதுவும் அரசியல் வியாபாரப் பொருளாக ஆக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு, சொல்வதற்கு சாதனைகளோ, கொள்கையோ இல்லாததால் மக்களின் ஆன்மிக உணர்வைத் தூண்டிவிட்டுக் குளிர்காய நினைக்கிறார்கள். அரசியலுக்கும் ஆன்மிகத்துக்குமான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அரசியல் என்பது மக்களின் உரிமை சார்ந்தது. ஆன்மிகம் என்பது மனம் சார்ந்தது. இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்ந்து குழப்பவும் முடியாது. இரண்டையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து ஏமாற்றவும் முடியாது.

சிறுபான்மை இயக்கத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், கலைஞருக்குமான நட்பு என்பது காலம் காலமாகத் தொடர்வது ஆகும். தொப்புள் கொடி உறவு போன்றது என அனைவரும் இங்கே சுட்டிக்காட்டினார்கள். நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பேசி இருக்கிறார். இத்தகைய அதிமுகவுக்கு சிறுபான்மையினரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டமானது இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், ஈழத்தமிழர்களையும் மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும். அதனால் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்த்தோம்.

மாநிலங்களவையில் நிறைவேறியதற்குக் காரணம், அதிமுக. அளித்த 11 வாக்குகள், அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கு. இந்த 12 வாக்குகளும் சேர்ந்து அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணம் ஆனது. மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய விவசாயிகள் நலனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் அவை.பாஜ-அதிமுக அரசை நிராகரிக்க வேண்டியது அனைவரது கடமையும் ஆகும்.   

பல்லாயிரம் கோடிகளில் நாடாளுமன்றம் கட்டுகிறார்கள். இந்த விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாதா? அந்தக் கட்டடம் இப்போது தேவையா என்று விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது. இதைத்தட்டிக் கேட்கும் கம்பீரமான தமிழகமாக இது இல்லை. எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் ஆதரித்து, மத்திய அரசின் அடியொற்றி நடந்து கொண்டிருக்கிறார். அவருக்கு விவசாயி என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இல்லையா? எப்பொழுது பார்த்தாலும் ‘விவசாயி விவசாயி’ என்று சொல்லிக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார். விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர். இவ்வாறு திமுக தலைவர் உரையாற்றினார்.

தினேஷ் குண்டுராவ் தாயார் மறைவுக்கு இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குண்டுராவின் துணைவியாரும், தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவின் தாயாருமான வரலட்சுமி குண்டுராவ் உடல் நலிவுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். அவருடைய மறைவிற்குத் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : MK Stalin ,minorities ,DMK ,Tamil Nadu , Minority, DMK, MK Stalin, Speech
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...