×

களக்காடு அருகே விளைநிலங்களில் காட்டு பன்றிகள் அட்டகாசம்: நிலக்கடலை பயிர்கள் சேதத்தால் விவசாயிகள் கவலை

களக்காடு: களக்காடு அருகே விளைநிலங்களில் புகும் காட்டுப் பன்றிகள் நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்ப
கத்தில் புலி, யானை, சிறுத்தை, கரடி, கடமான், செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவை மலையடிவாரத்தில் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அந்தவகையில் களக்காடு அருகே சிதம்பரபுரம் இலவடி அணைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

பகல் நேரங்களில் புதர்களில் பதுங்கும் காட்டுப் பன்றிகள் இரவில் விளைநிலங்களில் புகுந்து வாழை, நெல் பயிர்களை சேதப்படுத்துகின்றன. தற்போது இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்களை கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகள், பிடுங்கி துவம்சம் செய்கின்றன. நாலாபுறங்களில் இருந்தும் படையெடுத்து வருவதால் இவற்றை விரட்ட முடியமால் திணறுகின்றனர். இவற்றை ஒரு பக்கமாக விரட்டினால் அவை மற்றொருபக்கம் வழியாக விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவதாக சாகுபடியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல ஏக்கர் நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து நிலக்கடலை சாகுபடியாளரான அருண் (43) என்பவர் கூறுகையில், ‘‘3 ஏக்கரில்  நிலக்கடலை சாகுபடி செய்துள்ள நிலையில் 1 ஏக்கர் பரப்பளவிலான பயிர்களை பன்றிகள் கூட்டம் நாசம் செய்துள்ளன. அதுவும் அறுவடை நேரத்தில் சேதப்படுத்தியுள்ளதால் பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார். இவ்வாறு காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், இவற்றை  விரட்டவும், சேதமடைந்த நிலக்கடலை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்  வலியுறுத்தி உள்ளனர்.

Tags : fields ,Kalakadu , Wild boars roam the fields near Kalakadu: Farmers worried over damage to groundnut crops
× RELATED 8 நாட்களுக்கு பிறகு களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி