×

8 நாட்களுக்கு பிறகு களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி

*சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

களக்காடு : தொடர் மழையால் மூடப்பட்ட களக்காடு தலையணை 8 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. வனத்துறையினரால் சூழல் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீரில் குளுமை அதிகம் என்பதால் அதில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கடந்த 19ம் தேதி தலையணை மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மழையின் காரணமாக தண்ணீர் வரத்தும் அதிகரித்து வந்தது. இதனிடையே யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்ததால் தலையணைக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது.

இதையடுத்து புலிகள் காப்பக துணை இயக்குநர் ரமேஷ்வரன் ஆலோசனையின் பேரில் களக்காடு தலையணையை திறக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை தலையணை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.8 நாட்களுக்குப் பின்னர் தலையணை திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. தலையணையில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

திருமலை நம்பி கோயிலுக்கு இன்று முதல் செல்லலாம்

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் பழமை வாய்ந்த திருமலைநம்பி கோயில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு மிக்கது ஆகும். இந்நிலையில் கோடை மழையின் காரணமாக வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனைதொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 19ம் தேதி முதல் திருக்குறுங்குடி வனப்பகுதி மூடப்பட்டது. திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வந்ததால் தடை உத்தரவு நீடிக்கப்பட்டது.

இதற்கிடையே நம்பியாற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதையடுத்து மூடப்பட்ட திருக்குறுங்குடி வனப்பகுதியை திறக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் வனப்பகுதி திறக்கப்படுகிறது. திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல 9 நாட்களுக்கு பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே கோயிலுக்கு சென்று வர வேண்டும் என்றும், அதுபோல சுற்றுலாப்பயணிகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

The post 8 நாட்களுக்கு பிறகு களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Western Ghats ,Kalakadu Tiger Reserve ,Nellai district.… ,
× RELATED குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது