×

பிரசவத்தின் போது. தலையை துண்டித்து வெளியே எடுக்கப்பட்ட குழந்தை உடல் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை:பிரசவத்தின் போது குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பொது சுகாதார இயக்குநர் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரபாபு (35). இவரது மனைவி பாக்கியலட்சுமி (26). ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு அண்மையில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, ஓசூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்ற, பாக்கியலட்சுமி உறவினர்கள், டாக்டர்களிடம் கூறினர். ஆனால், அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த, 30ல் மதியம், ஆண் குழந்தையின் கால், உடல் பகுதி மட்டும் தாயின் வயிற்றில் இருந்து வெளியேற, தலைப்பகுதி மட்டும் சிக்கி கொண்டது. குழந்தை இறந்து விட்டதாக கூறி, உடல் பகுதியை மட்டும் டாக்டர் குழுவினர் வெட்டி எடுத்தனர். அதன் பின் பாக்கியலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த குழந்தையின் தலையை அகற்றினர். டாக்டர்களின் அலட்சியத்தால், குழந்தை இறந்து விட்டதாக, பாக்கியலட்சுமி உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தி நாளிதழில் வெளியானது. இதை பார்த்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார். மேலும் இது தொடர்பான விரிவான அறிக்கையை பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


Tags : childbirth ,Human Rights Commission , Human Rights Commission, Notice
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...