அதிமுக துணை சபாநாயகர் ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் நெருக்கமானவர்கள் : கே.எஸ்.அழகிரி

சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் அ.தி.மு.க. துணை சபாநாயகர் ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதால் ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் சி.பி.ஐ. விசாரணை நடைபெற வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுத்துறை மேற்கொண்ட பிறகு பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இவ்வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் பெண்கள் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து, அதை வைத்துக் கொண்டு அச்சுறுத்துவது, முகநூலில் வெளியிடுவது போன்றவற்றின் மூலம் பணம் கேட்டு மிரட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பதிலாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை தீவிரமாக எழுப்பப்பட்டது. இதையொட்டி, கடந்த 12 மார்ச் 2019 முதல் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 24, 2020 இல் விசாரணையை முடித்து விட்டதாக கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் ஆளுங்கட்சி சம்மந்தப்பட்டவர்கள் மீது விசாரணையோ, கைது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்று கடும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய புலனாய்வுத்துறை சி.பி.ஐ. விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்தது பலத்த சந்தேகத்தை எழுப்பியது. இதில் அ.தி.மு.க. தலையிட்டு குற்றத்தில் சம்மந்தப்பட்ட ஆளுங்கட்சியினரை காப்பாற்றுகிற முயற்சியாகவே கருதப்பட்டது. இதற்கு சி.பி.ஐ. துணை போகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், எதிர்கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். காலந்தாழ்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

ஏனெனில் இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அ.தி.மு.க. துணை சபாநாயகர் ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதால் ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் சி.பி.ஐ. விசாரணை நடைபெற வேண்டும். ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் இருப்பதால் மத்திய புலனாய்வுத்துறை, குற்றவாளிகள் மீதான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என்பதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீவிர கண்காணிப்பின் மூலமே குற்றவாளிகளை மத்திய புலனாய்வுத்துறை விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிற நிலை ஏற்படும். இதன்மூலமே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட இளம் பெண்களுக்கு நீதி கிடைக்கும்.

எனவே, தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்திய அ.தி.மு.க.வினர் சம்மந்தப்பட்ட பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலமே நிகழ்த்தப்பட்ட களங்கத்தை துடைக்க முடியும், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>