மாநிலத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் மஜத தனித்து போட்டியிடும்: முன்னாள் முதல்வர் குமாரசாமி உறுதி

பெங்களூரு: மாநிலத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தேர்தலில் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். பெங்களூரு மஜத தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட, தாலுகா அளவிலான தலைவர்கள் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,மாநிலத்தில் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள பொது சட்டப்பேரவை தேர்தலில் மஜத தனித்து போட்டியிடும். தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ. என்ன என்று எங்களுக்கு தெரியும். இவர்கள் மஜத அழிந்து விட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் யாரும் எங்களை அழிக்க முடியாது. காங்கிரஸ் ஆதரவால் மஜதவில் பிரதமர், முதல்வர் பதவிக்கு வர முடிந்தது என்று காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.  மஜதவை சேர்ந்தவர்கள் யாரும் காங்கிரஸ் கட்சியின் வீட்டு வாசலுக்கு செல்லவில்லை. அவர்கள் தான் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

நாட்டுக்கு சுதந்திரம் பெற்று கொடுத்த பழைய காங்கிரஸ் குறித்து நான் பேசவில்லை. அந்த காலத்து காங்கிரஸ் மீது எனக்கு அதிகமான கவுரவம் உள்ளது. நான் பேசி வருவது தற்போதைய காங்கிரஸ் குறித்து மட்டுமே. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரால் நான் முதல்வர் பதவிக்கு வரவில்லை. கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கு முன் பா.ஜ.வினர் கிராம சுயராஜ்ய கூட்டம் நடத்தினர். அதே போல் பணம் பலத்தின் மூலம் தேர்தலை எதிர்கொண்டனர். இது குறித்து அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். பா.ஜ. மாநில பொறுப்பாளர் அருண்சிங்கை நான் எப்போதும் சந்தித்து கிடையாது. ஆனால் கட்சி எம்.எல்.ஏக்களின் பிரச்னைகள் குறித்து முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேசியது உண்மை. அப்போது அரசியல் குறித்து எதுவும் ஆலோசனை நடத்தவில்லை.

கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுக்கு பின் மஜத சக்தி என்ன என்று அனைவருக்கும் புரிந்துள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ. கட்சியினர் தங்கள் கட்சியினர் அதிகமாக வெற்றிபெற்றதாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் அப்படி தெரிவிப்பது கிடையாது. சங்கராந்தி பண்டிக்கைக்கு பின்னர் கட்சியில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர வேண்டியுள்ளது. கீழ் மட்டத்திலிருந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா கர்நாடகாவை விட்டு டெல்லி செல்ல மாட்டார் என்று கூறும் காங்கிரஸ் தான், என்னுடைய வீட்டுக்கு வந்து முதல்வர் பதவி வழங்கியது என்றார்.

Related Stories:

>