கொரோனா தொற்று பாதித்த 500க்கும் மேற்பட்டவர்களை தேடும் அதிகாரிகள்: பீதியில் உறைந்துள்ள மக்கள்

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா தொற்று பாதித்த சுமார் 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் உதவியுடன் தேடி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டு முழுவதும் ஸ்தம்பித்தது. தற்போது அதில் இருந்து மீண்டு வரும் நிலையில் புதிதாக இங்கிலாந்தில் உருமாற்று கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளது. இந்த தொற்று பாதித்தவர்களை நகருக்குள் நுழைய விடாத வகையில், விமான நிலையங்களில் அதிகாரிகள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த சனிக்கிழமை மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பலர் கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை, கொரோனா தொற்று சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதில் 50 சதவீதம் பேர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலருக்கு ேலசான அறிகுறி மட்டுமே தென்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,``கொரோனா தொற்று பாதித்த அனைவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது அவர்களை போலீசாரின் உதவியுடன் தேடி வருகிறோம். சிலர், தங்களின் செல்போன் எண்களை அணைத்து வைத்துள்ளனர்.

மேலும் பலர் வேறு நகரத்திற்கு சென்றிருக்கலாம். கடந்த சனிக்கிழமை வரை சுமார் 506 பேரை பிடிக்க முடியவில்லை. அவர்களில் அதிகப்படியாக சுமார் 190 பேர் பெங்களூரு கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் மேலும் 88 பேர் பொம்மனஹள்ளியை சேர்ந்தவர்கள்’’ என்றார். இதுகுறித்து மாநகராட்சியின் சிறப்பு ஆணையர் (சுகாதாரம்) ராஜேந்தர சோழன் கூறியதாவது,  ``இந்த நிகழ்வினால்  எந்த பிரச்னையும் இல்லை.

இது இந்த வாரத்திற்குறிய தரவு மட்டுமே. அதிகப்படியான தொற்று பாதித்தவர்கள் வேறு நகரை சேர்ந்தவர்களாக உள்ளனர். வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் முதலாளிக்கு தெரியாமல் தங்களில் சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம். அவர்களுக்கு என நிலையான முகவரியும் இல்லை. இதனால் அவர்களை கண்டறிவதில் சிரமம் உள்ளது.  மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 11 சதவீதம் பேர் இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்கள். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவு. இங்கிலாந்திலிருந்து திரும்பிய 270  பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இன்னும் குறைந்த அளவிலான நபர்களை மட்டுமே கண்டுபிடிக்க படவேண்டும்.

வேறு மாநிலங்களில் வேலை செய்பவர்கள் அங்கு சென்றிருக்கலாம். 2300க்கும் மேற்பட்டவர்கள் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 6 இருந்து 10 பேர் மட்டும் புதிய உருமாற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சதவீதம் 1.1 ஆக உள்ளது. இந்த டெல்லி, மும்பை சென்னை உள்ளிட்ட மற்ற பெரிய நகரங்களை காட்டிலும் குறைவு’’ என தெரிவித்தார்.

Related Stories:

>