×

மேற்கு வங்க மார்க்சிஸ்ட் தலைவர் பரபரப்பு: அரசியலில் சேரக்கோரி அழுத்தம் தந்ததால் கங்குலிக்கு மாரடைப்பு

கொல்கத்தா: ‘அரசியலில் சேரக் கோரி சவுரவ் கங்குலிக்கு அதிகமான நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்கப்பட்டதால் மாரடைப்பு வந்திருக்கலாம்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு சனிக்கிழமை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, கங்குலியின் மனைவியை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், அரசியலில் இணைய வலியுறுத்தி பாஜ தரப்பில் கங்குலிக்கு கடும் நெருக்கடி அளிக்கப்படுவதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கங்குலி அரசியலில் இணைய வேண்டும் என்று அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.  அரசியல் ரீதியாக கங்குலியைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.

இது கங்குலிக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.கடந்த வாரம் கங்குலி என்னிடம் பேசியபோதுகூட நான் அவரிடம், அரசியலுக்கு வராதீர்கள், அரசியலில் சேரக்கூடாது எனத் தெரிவித்தேன். அதற்கு கங்குலி என் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இவ்வாறு கூறி உள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க பாஜ தலைவர் திலீப் கோஷ், ‘‘சிலர் எல்லாவற்றிலும் அரசியலை பார்க்கின்றனர். அவர்களின் மோசமான மனநிலையே இதற்கு காரணம்.’’ என்றார். மாரடைப்புக்கு முன்னதாக கங்குலி, மேற்கு வங்க ஆளுநரை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து கங்குலி பாஜ கட்சியில் சேரப் போவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நாளை டிஸ்சார்ஜ்
கங்குலியின் உடல் நிலை தற்போது சீரடைந்துள்ளதாகவும், அவர் நாளை (6ம் தேதி) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். அதே சமயம் அடுத்த சில வாரங்களில் கங்குலிக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

Tags : West Bengal Marxist ,Ganguly , West Bengal, Marxist, agitation, Ganguly
× RELATED மம்தாவுடன் சவுரவ் கங்குலி சந்திப்பு திரிணாமுல் காங்கிரசில் இணைகிறாரா?