×

தேசிய நெடுஞ்சாலையில் உடைந்த பாதாள சாக்கடை மேன்கோல்: வடசேரியில் விபத்து ஏற்படும் அபாயம்

நாகர்கோவில்: வடசேரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்ட பாதாளசாக்கடை மேன்கோல் உடைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் புத்தன்அணை குடிநீர் திட்ட பணிக்காக குழாய் பதிக்கும் பணி மற்றும் பாதாளசாக்கடை திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி என இருபணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை குடிநீர்வடிகால் வாரியம் செய்து வருகிறது. மாநகர பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் உடைக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதில் பல சாலைகளை தற்போது மாநகராட்சி நிர்வாகம் சீர் செய்து வருகிறது.

கன்னியாகுமரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை, காவல்கிணறு - பார்வதிபுரம் தேசிய நெடுஞ்சாலை என இரு சாலைகள் நாகர்கோவில் மாநகர பகுதி வழியாக செல்கிறது. இந்த இரு சாலைகளிலும் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக அளவு கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் பாதாளசாக்கடைக்கு குழாய் பதிக்கப்பட்ட பகுதியில் சாலை மேடு, பள்ளமாக மாறியுள்ளது. வடசேரி முதல் ஒழுகினசேரி வரை பதிக்கப்பட்டுள்ள பாதாளசாக்கடையில் 10க்கும் மேல் பட்ட மேன்கோல்கள் உள்ளன. இதில் வடசேரி ஜங்சன் பகுதியில் உள்ள ஒரு மேன்கோல் உடைந்து கம்பி வெளியே தெரிந்துகொண்டு இருந்தது.

மேலும் பல வாகனங்கள் சென்று வந்ததால், மேன்கோலில் உள்ள காங்கிரீட்கள் உடைந்து பெரிய பள்ளமாக மாறியுள்ளது. இதனால் இந்த பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த சிலர் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்கும் வகையில் அந்த பள்ளத்தில் தென்னை ஓலையை வைத்துள்ளனர்.நாகர்கோவில் மாநகர பகுதியில் நடந்து வரும் பாதாளசாக்கடை பணியில் மேன்கோல் தரமற்றதாக உள்ளது. வாகனங்கள் அதிக அளவு செல்லும் போது அதிர்வு, எடைதாங்காமல் உடைந்து வருகிறது. நகர பகுதியில் பல மேன்கோல்கள் உடைந்து, அதனை குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளின் நடவடிக்கையால் மாற்றப்பட்டு வருகிறது.

நீண்டநாட்கள் உழைக்கவேண்டிய இந்த மேன்கோல், பாதாளசாக்கடை திட்டம் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே உடைந்து வருவது வருத்தமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பாதாளசாக்கடைக்கு அமைக்கப்படும் மேன்கோல்கள் தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Tags : North Side , Broken Sewer Manhole on National Highway: Risk of Accident in the North
× RELATED தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13...