பிரமாண்டமான சூலத்தை தாங்கி, தலையில் கங்கையை சுமந்தவாறு கேரள கடற்கரையில் காட்சியளிக்கும் 58 அடி உயர சிவன் சிலை!!

திருவனந்தபுரம் : இந்தியாவின் மிகவும் உயரமான சிவன் சிலை கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் இருந்து பூவாறு - கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆழிமலை சிவன் ஆலயம். ஒரு பகுதி கடற்கரை சார்ந்தும் மற்றொரு பகுதி மலை சார்ந்தும் ஆலயம் அமைந்துள்ளதால் ஆழிமலை என்று பெயர் பெற்றுள்ளது. புகழ்பெற்ற ஆழிமலை சிவன் ஆலயத்தில் தற்போது 58 அடி உயரம் கொண்ட கங்காதரேஸ்வரா உருவத்தில் உள்ள சிவன் சிலையும், சிலையின் உட்பகுதியில் உள்ள பாறைகளை குடைந்து 3500 சதுர அடியில் தியான மண்டபம் அமைக்கும் பணியும் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, கங்காதர சிவ ரூபத்தில் உள்ள இந்த சிவன் சிலை கடந்த வியாழக்கிழமை முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ள பாறையின் மேல் 58 அடி உயரத்துக்கு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. தலையில் கங்கை உடன் பெரிய சூலம், உடுக்கையைக் கையில் கொண்டு அமர்ந்த நிலையில் சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் கேரளா மட்டும் இன்றி சர்வதேசத் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் இந்த சிவன் சிலையை தரிசனம் செய்து செல்கின்றனர்.

Related Stories:

>