×

குடிநீர் வடிகால் வாரியத்தின் மெத்தனத்தால் பாலமோர் ரோடு சீரமைப்பு பணியில் சிக்கல்: ஜல்லி நிரப்பி தார் போட முடியாமல் தவிப்பு

நாகர்கோவில்:  குடிநீர் வடிகால் வாரியம் பணிகளை முடித்து, சாலையை சரண்டர் செய்யாமல் இருப்பதால், பாலமோர் ரோடு சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் வகையில், புத்தன்அணை குடிநீர் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தடிக்காரன்கோணம் முதல், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள குடிநீர்  சுத்திகரிப்பு நிலையம் வரை குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் பாலமோர் ரோடு குண்டும், குழியுமாக கிடக்கிறது. குழாய்கள் பதிக்கப்பட்ட பின், சாலை சீரமைக்கப்படாததால் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன.

இதுவரை சுமார் 10 பேர் பலியாகி உள்ளனர். இந்த பணிகளை விரைந்து முடித்து பாலமோர் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. ஆனால் குடிநீர் குழாய் பதிப்பில், குடிநீர் வடிகால் வாரியம் மெத்தனமாக உள்ளது. போதிய பணியாளர்கள் இல்லாததால், பணிகளை விரைந்து முடிக்க முடிய வில்லை. கொரோனா காரணமாக ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்கள் பலர் இன்னும் முழுமையாக திரும்பி வரவில்லை. இதனால்  தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலைக்கு சரி வர கிடைப்பதில்லை.

அவ்வாறு வேலைக்கு வந்தாலும் கூட 10 நாட்களில் வேண்டாம் என்று சென்று விடுவதால், பணிகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் செய்வதறியாமல் திணறி வருகிறார்கள். இதனால் குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதியில் இணைப்பு கொடுத்து டெஸ்டிங் செய்து, சரண்டர் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். ஆனால் நெடுஞ்சாலைத்துறை பொதுமக்களின் நலன் கருதி, சரண்டர் செய்யப்படாத பகுதியிலும் குண்டு, குழிகளை சரி செய்யும் வகையில் ஜல்லிகளை நிரப்பி சமன் செய்துள்ளனர். ஆனால் தார் போட முடிய வில்லை.

குடிநீர் வடிகால்வாரியம் குழாய்களை இணைத்து டெஸ்டிங் முடித்தால் தான் தார் போட முடியும். அவர்கள் டெஸ்டிங் முடித்து சரண்டர் செய்யாமல் தார் போட்டால், மீண்டும் சாலையை தோண்டி சேதப்படுத்தி விடுவார்கள் என நெடுஞ்சாலைத்துறையினர் கூறினர். போர்க்கால அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை வைத்து பாலமோர் ரோட்டில் நடத்தப்பட வேண்டிய பணிகளை வேகமாக முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

Tags : Drinking Water Drainage Board , Problem with Palamore Road Rehabilitation Project due to inefficiency of Drinking Water Drainage Board:
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...