×

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் பல் டாக்டர் பெங்களூருவில் கைது

* வரும் 11ம் தேதி வரை சிறையில் அடைப்பு
* 5 நாள் காவலில் எடுக்க போலீஸ் முடிவு

சென்னை: மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் தேர்வு மதிப்பெண்கள் கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த மாணவியின் தந்தை பல் டாக்டரை தனிப்படை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்த 5 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழக மருத்துவ கலந்தாய்விற்கு 610 மதிப்பெண் ெபற்றதாக போலி நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் சமர்ப்பித்தது, போலி தரவரிசை பட்டியல், கலந்தாய்வுக்கான போலி அழைப்பு கடிதம் தயாரித்து மோசடி செய்ததாக பரமக்குடியை சேர்ந்த மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை பல் டாக்டர் பாலசந்திரன் மீது மருத்துவ கல்வி இயக்ககம் துணை இயக்குநர் செல்வராஜன் அளித்த புகாரின்படி, பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை பாலசந்திரனை தேடி வந்தனர். வழக்கு தொடர்பாக நோில் ஆஜராகி விளக்கும் அளிக்கும்படி காவல்துறை சார்பில் 3 முறை சம்மன் அனுப்பியும் மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை பாலசந்திரன் நேரில் ஆஜராகவில்லை.

இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பல் டாக்டர் குடும்பத்துடன் பெங்களூரு தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. உயர் நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதற்குள் மோசடியில் ஈடுபட்ட மாணவி மற்றும் அவரது தந்தையை கைது செய்ய வேண்டும் என்ற கட்டாயம் போலீசாருக்கு ஏற்பட்டது. இணை கமிஷனர் சுதாகர் உத்தரவுப்படி பல் டாக்டர் மற்றும் மாணவியை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் செல்போன் சிக்னல் மற்றும் உறவினர்கள் செல்போன் சிக்னல் உதவியுடன் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் பதுங்கி இருந்த மாணவியின் தந்தை பாலசந்திரன், அவரது வழக்கறிஞரிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று பாலசந்திரனை கைது செய்தனர். தீக்‌ஷா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

பின்னர் பாலசந்திரனை தனிப்படை போலீசார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். 2 மணி நேரம் விசாரணைக்கு பிறகு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரது உத்தரவுப்படி வரும் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.மேலும், போலி நீட் தேர்வு மதிப்பெண் தயாரித்தது, போலி தரவரிசை பட்டியல் தயாரித்தது எப்படி, இதன் பின்னணில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்த 5 நாள் காவலில் எடுக்க பல் பாலசந்திரனை பெரியமேடு போலீசார் முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : doctor ,Bangalore , Fake, need score, dentist, arrest
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...