×

சொந்த கட்சியில் பொதுச்செயலாளராக முடியாத முதல்வர் எடப்பாடியை பொது எதிரியாக கருதவில்லை: அரியலூர், பெரம்பலூர் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுகவின் 4 ஆண்டு கால முதல்வராக இருந்த பிறகும், சொந்தக் கட்சியில் பொதுச்செயலாளராக முடியாத ஒரு பலவீனமான மனிதரை, பொது எதிரியாக நானோ திமுகவோ கருதவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’-2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக தலைமையேற்று பேசியதாவது:ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி, திருச்சியில் பேசியிருக்கிறார்.

அதிமுகவை உடைக்க நானோ திமுகவோ நினைக்கவில்லை, அது அவசியமும் இல்லை. நாங்கள் சொந்த பலத்தில் நிற்பவர்களே தவிர, அடுத்தவர் பலவீனத்தில் குளிர் காய்பவர்கள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். அதிமுகவின் நான்கு ஆண்டுகால முதல்வராக இருந்த பிறகும், சொந்தக் கட்சியில் பொதுச்செயலாளராக முடியாத ஒரு பலவீனமான மனிதரை, பொது எதிரியாக நானோ திமுகவோ கருதவில்லை. ஏழைகளுக்குக் கொடுப்பதைத் தடுக்கும் இவர் ஒரு தலைவரா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. கொடுப்பதை நான் தடுக்கவில்லை. ஏன் குறைவாகக் கொடுக்கிறீர்கள் என்று தான் கேட்டேன். ஏப்ரல் மாதம் முதல் 5000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னவன் நான். அப்போதெல்லாம் கொடுக்காத கல்நெஞ்சக்கார பழனிசாமி எல்லாம் மனிதரா? இன்று அவர் ஏழைகளுக்கு இரக்கப்பட்டு 2500 ரூபாய் தரவில்லை; தேர்தலுக்காகக் கொடுக்கிறார். அரசு பணத்தை அ.தி.மு.க. நலனுக்காகக் கொடுக்கிறார். அதிமுக டோக்கன் கொடுத்து அவர் தான் மாட்டிக் கொண்டார். வழக்குப் போட்டோம். ஆர்வக் கோளாறாக சிலர் கொடுத்துவிட்டார்கள் என்று திருடனுக்குத் தேள் கொட்டியது மாதிரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட வெட்கம் கெட்ட அரசு தான் இது.

சென்னை மாநகரத்தின் மேயராக இருந்த ஸ்டாலின் என்ன சாதனை செய்திருக்கிறார்?’ என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். சென்னையின் தெருவில் இறங்கிக் கேளுங்கள். அதைவிட்டு விட்டு பொதுக்கூட்டத்தில் கேட்பதால் என்ன பயன்?. சென்னையில் பழனிசாமி பயணிக்கும் பாலங்கள் அனைத்தையும் கட்டியது இந்த ஸ்டாலின் தான். ஒன்றல்ல, ஒன்பது பாலங்களைக் கட்டினேன். பழனிசாமியைப் போல டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தவனல்ல நான். ஒரு திட்டத்தை உருவாக்கும் போது அதனால் கோடிக்கணக்கான மக்கள், லட்சக்கணக்கான ஏழைகள், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுகிறார்களா என்பதைப் பார்த்து அத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தியவன் நான்.

ஸ்டாலின் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேட்கும் தார்மீக யோக்கியதை எடப்பாடி பழனிசாமிக்கோ, பிற அதிமுக அமைச்சர்களுக்கோ கிஞ்சித்தும் இல்லை. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்கும் வரை தூக்கம் இல்லை. தமிழகத்துக்குத் துயரமான ஆட்சி இது. இந்தத் துயரம் களையப்பட வேண்டும். தமிழகத்துக்குத் துக்கமான ஆட்சி இது. இந்த துக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். தமிழகத்துக்கு துரோகம் செய்த ஆட்சி இது. அத்தகைய துரோகிகள் துரத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chief Minister ,Edappadi ,General Secretary ,party ,public enemy ,meeting ,Ariyalur ,speech ,Perambalur ,MK Stalin , MK Stalin, speech
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்