×

சபரிமலையில் மகர விளக்கு பூஜைகள் தொடங்கின

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் மகர விளக்கு பூஜைகள் தொடங்கின. மேல்சாந்தி சுய தனிமையில் சென்றதால் அவருக்கு பதிலாக தந்திரி கண்டரர் ராஜீவரர் நடை திறந்து பூஜைகள் நடத்தினார்.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாள் நீண்ட மண்டல கால பூஜைகள் கடந்த 26ம் தேதி நடந்த மண்டல  பூஜையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த 3 நாட்கள் நடை சாத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில்  மகர விளக்கு பூஜைகளுக்காக கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

தந்திரி கண்டரர் ராஜீவரர் நடை திறந்தார். பூஜைக்கு பின் நடை சாத்தப்பட்டது. இன்று காலையும் அவர் தான் நடை திறந்தார். பூஜைகள் தந்திரியின் தலைமையில் நடந்து வருகின்றன.  இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 5000 பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.  கடந்த மண்டல காலம் வரை சபரிமலை வரும் பக்தர்கள் ஆண்டிஜன் பரிசோதனை நடத்தினாலே போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த  பரிசோதனையில் நெகடிவ் ஆனவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.  பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை வரும் ஜனவரி 17ம் தேதி நடக்கிறது 19ம் தேதி வரை தரிசனம் செய்யலாம். 20ம் தேதி காலை 7 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு காலம்  நிறைவடையும்.

மேல்சாந்தி சுய தனிமை

சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜின் உதவியாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மேல்சாந்தி மற்றும்  அவரது உதவியாளர்கள் 7  பேர் சுய தனிமைக்கு சென்றனர். இதனால் நேற்று மாலை மேல்சாந்திக்கு பதிலாக தந்திரி கண்டரர்ராஜீவரர் நடை திறந்து பூஜைகள் செய்தார்.

Tags : Sabarimala , Capricorn lamp pujas started in Sabarimala
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு