×

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த மேலும் 14 பேருக்கு புதிய வகை கொரோனா: 2 வயது சிறுமிக்கும் பாதிப்பு: ஜன.31 வரை வெளிநாட்டு விமானங்களுக்கு தடை..!

புதுடெல்லி: இங்கிலாந்தில் இருந்து திரும்பிய மேலும் 14 பேருக்கு புதிதாக  உருமாறியுள்ள வீரியமிக்க கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதில், 2 வயது சிறுமிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு ஜனவரி 31 வரையில் மத்திய அரசு தடை விதித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பின் தாக்கம் கடந்த சில மாதங்களாக கணிசமாக குறைய தொடங்கியதோடு, கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தில் சில நாட்களாக புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஏற்கனவே இருந்த கொரோனா, மரபணு மாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன், பழையதை விட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது.

டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்சு, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான் மற்றும் சிங்கப்பூரிலும் இந்த புதிய கொரோனா பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது, இந்தியாவிலும் இது காலடி வைத்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து திரும்பிய தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு இருப்பதை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் உறுதி செய்தது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 20 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து திரும்பிய மேலும் 14 பேருக்கு புதிய வைரஸ் தாக்கி இருப்பது, பரிசோதனையில் உறுதியாகி இருக்கிறது.

தேசிய நோய் கட்டுப்பாடு மையத்தில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் 8 பேருக்கும், கொல்கத்தா அருகே கல்யாணியில் உள்ள தேசிய உயிரியல் மருத்துவ மையம், புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தின் ஆய்விலும் தலா ஒருவருக்கும் புதிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் மையத்தில் 7 பேருக்கும், ஐதராபாத் ஆய்வு மையத்தில் 2 பேருக்கும், டெல்லியில் உள்ள ஆய்வு மையமத்தில் ஒருவருக்கும் புதிய வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இவர்களில் உத்தர பிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்த 2 வயது சிறுமிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இங்கிலாந்தை மிரட்டி வரும் புதிய கொரோனா இந்தியாவுக்கும் வந்து விட்டதால், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு ஜனவரி 31 வரையில் மத்திய அரசு நேற்று தடை விதித்தது. சிறப்பு விமானங்கள், சர்வதேச சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் அது அறிவித்துள்ளது.

அரியானா அமைச்சர் அனில் விஜ் டிஸ்சார்ஜ்
அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் (67), கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினின் 3வது கட்ட பரிசோதனையில் தன்னார்வலராக கலந்து கொண்டு, கடந்த நவம்பர் 20ம் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன் பிறகு, கடந்த 5ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடல்நிலை மோசமானதால்,  குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதால், உடல்நிலை சீராகி உள்ளது. எனவே, நேற்று அவர் வீடு திரும்பினார். இது குறித்து அனில் விஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஆக்சிஜன் கருவி உதவியுடன், அம்பாலாவில் உள்ள எனது வீ்ட்டில் இருக்கிறேன்,’ என கூறியுள்ளார்.

பைசர் தடுப்பூசி பயன்படுத்திய அமெரிக்க நர்சுக்கு கொரோனா
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் மேத்யூ (45). இவர் இருவேறு மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த 18ம் தேதி பைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக பதிவிட்டுள்ளார். 6 நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு பின் கொரோனா பிரிவில் பணியாற்றிய நிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு உறுதி
இங்கிலாந்தில் இருந்து கர்நாடகா வந்தவர்களை கண்டுபிடித்து, சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். இதில், கடந்த 23ம் தேதி வந்த  ஷிவமொக்கா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு புதிய வகை கொரோனாவின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கர்நாடகாவில் புதிய கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அனுமதி
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ‘பைசர்’ எனப்படும் கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு இந்த மாத தொடக்கத்தில் முதல் நாடாக இங்கிலாந்து அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் இதை பயன்படுத்த அனுமதி அளித்தன. இதேபோல், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை பயன்படுத்த, உலகில் முதல் நாடாக இங்கிலாந்து அரசு நேற்று அனுமதி அளித்தது.

இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை அவசர காலத்தில் பயன்படுத்த இங்கிலாந்து நேற்று அனுமதி அளித்த நிலையில், இந்தியாவிலும் இதுபோல் பயன்படுத்த அனுமதிக்கும்படி இந்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதன் மீது இன்று முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Tags : England ,India ,flights , UK, new type corona
× RELATED ஐக்கிய அரபு எமிரேட்டில் மீண்டும்...