×

தடுப்பூசி போட்ட பிறகும் எச்சரிக்கை அவசியம்!: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்ட 8 நாட்களில் செவிலியருக்கு தொற்று உறுதி..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்ட 8 நாட்களில் செவிலியர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த செவிலியர் மேத்யூ, கடந்த 18ம் தேதி ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு கடந்த 24ம் தேதி மாலை குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 26ம் தேதி மருத்துவமனைக்கு சென்ற மேத்யூ, கொரோனாவுக்கான பரிசோதனையை செய்தார். அச்சமயம் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஆச்சரியம்தான். ஆனால் எதிர்பார்க்காதது என கூற இயலாது. தடுப்பூசி போடுவதற்கு முன்பே மேத்யூவுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கணிக்கின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியரான மாத்யூ  டிசம்பர் 18ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்டதும், மற்றவர்களைப் போல அவரும் சமூக ஊடகம் ஒன்றில் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து தகவல் வெளியிட்டு கம்பீரமாக ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டதால் வைரஸ் நம்மை தாக்காது; இனி நாம் சுதந்திரமாக நடமாடலாம் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தியாக உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், வழக்கம் போலவே,  கைகளை கழுவுதலும், மாஸ்க் அணிதலும், சமூக இடைவெளியும் பின்பற்றப்படுதல் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.

தடுப்பூசி போட்டுக்கொண்டபின் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் உருவாக சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை ஆகும். ஆகவே பாதுகாப்பாக இருப்பது நலம். அமெரிக்கா முழுவதும் டிசம்பர் 14ம் தேதி முதல் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி  மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதேபோல் டிசம்பர் 18ம் தேதி முதல் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கப்பட்டது. முதல்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு, வயதானோருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தினசரியில் 2 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.


Tags : USA, corona vaccine, 8 day, nurse, infection
× RELATED 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள...