மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு 6 மாத ரேசன் பொருள்: திட்டத்தை துவக்கி வைத்தார் கெஜ்ரிவால்

புதுடெல்லி: மதிய உணவு திட்டத்தின் கீழ்  ஆறு மாதங்கள் வரை மதிய உணவு திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உலர் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். கொரோனா பரவல் அச்சம் காரணமாக, நாடு முழுவதும் கடந்த மார்ச்  மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. சில பள்ளிகளில் கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் பகுதிநேரமாக திறக்கப்பட்டு விருப்படும் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டனர். எனினும், டெல்லியை பொருத்தவரை கோவிட் தொற்றுக்கான தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று ஆம் ஆத்மி அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

எனினும், பள்ளிகள் மூடப்பட்டாலும் மதிய உணவுக்கு மாற்றாக மாணவர்களின் பெற்றோர்களது வங்கி கணக்கிற்கு பணமாக அனுப்பி வைக்க அரசு முடிவு செய்தது. தற்போது, அதிலும் மாற்றம் செய்து கெஜ்ரிவால் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி, அடுத்த 6 மாதங்களுக்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டத்தின் கீழ் உலர் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டத்தை நேற்று மந்தாவாலி பகுதி அரசுப்பள்ளியில் நடைபெற்ற விழாவின் போது உலர்ரேசன் பொருட்களை விநியோகித்து தொடங்கிவைத்தார்.

கொரோனா: உருமாற்றம் அடைந்து பரவி வரும் புதிய கோவிட் தொற்றை எதிர்கொள்ள டெல்லி நகரம் தயாராக உள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் தற்போது உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, அந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கான விமான சேவையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. எனினும், அங்கிருந்து ஏற்கனவே இந்தியா வந்தடைந்தவர்களுக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதித்துள்ளதா என்பதை சம்மந்தப்பட்டவர்களை கண்டறிந்து பரிசோதனை நடத்தப்பட்டு வரகிறது. இதுவரை இந்தியாவில் இந்த உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் தொற்று இங்கிலாந்திருந்து இந்தியா வந்த 6 பேருக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய கோவிட் தொற்றை எதிர்கொள்ள டெல்லி தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறுகையில், ”டெல்லி, கொரோனா வைரசின் மூன்று அலைகளை எதிர்கொண்டது. மூன்றாவது அலையின் போது ஒரு நாளில் அதிகபட்ச பாதிப்பாக புதிதாக 8,500 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. எனினும், அதனை அரசு திறமையாக கையாண்டது. தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வரும் புதிய வைரசை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம்” என தெரிவித்தார்.

* டெல்லியில் இதுவரை கோவிட் தொற்றால் 6,23,415 பாதிக்கப்பட்டுள்ளனர்.  

* கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 10,474 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>