×

ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூர் ஏரி கரை உடையும் அபாயம்

அறந்தாங்கி: ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூர் ஏரி கரை பலமிழந்துள்ளதால், கரை உடைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் ஏரி 143 எக்டோ் பரப்பு கொண்டது. இந்த ஏரியில் இருந்து 97 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பொதுப்பணித்துறை தெற்கு வௌ்ளாறு வடிநில கோட்டத்தின் நிர்வாகத்தில் உள்ளன. பெருநாவலூர் ஏரி 2020-2021ம் ஆண்டு பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் மூலம் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் ஏரி தூர்வாருதல், கரைகள் பலப்படுத்துதல், மடைகள் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.46 லட்சத்து 85 நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை கொண்டு, பெருநாவலூர் ஏரி பாசனதாரர்கள் சங்கத்தினர் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டனர். குடிமராமத்து பணிகள் .கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டன.

பணிகள் தொடங்கப்பட்டு ஏரி தூர்வாரப்பட்ட போதிலும் பணிகள் முறையாக நடக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து பெருநாவலூர் ஏரி பாசன விவசாயி ஒருவர் கூறுகையில், பெருநாவலூர் ஏரிக்கு மழைத் தண்ணீர் மட்டுமே ஒரே ஆதாரமாக விளங்குகிறது. மழை பெய்யும் காலங்களில் மழைநீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறோம்.

பெருநாவலூர் ஏரியில் குடிமராத்து செய்ய அரசு நிதி ஒதுக்கியவுடன் பணி முறையாக நடைபெறும் என நாங்கள் நினைத்திருந்த நிலையில், குடிமராமத்து பணி முறையாக நடைபெறவில்லை. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் முறையாக தூர்வாராமல், கரைக்கு மண் தேவைப்பட்ட இடங்களில் மட்டும் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்பட்டுள்ளது. ஏரியின் உள்பகுதியில் முறையாக தூர்வாரப்படாத நிலையில், கரையும் முறையாக பலப்படுத்தப்படவில்லை. பல இடங்களில் கரைகள் குறைந்த உயரமே உள்ளன. சமீபத்தில் பெய்த மழையினால் கரையின் சில பகுதிகளில் சேதம் ஏற்பட்டு, உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

பெருநாவலூர் ஏரிக்கரை உடைந்தால் வளத்தக்காடு கிராமம் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே பெருநாவலூர் ஏரியை முறையாக தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.எனவே மாவட்ட நிர்வாகம் பெருநாவலூர் ஏரியில் குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெற்றுள்ளனவா என கண்காணித்து, கரைகள் பலமில்லாமல் உள்ள இடங்களில் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Perunavalur Lake ,Audyarko , Aranthangi
× RELATED கிராமசபை கூட்டத்தை சிறப்பாக நடத்த...