கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடங்கியது: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் துவங்கியுள்ளது. பனிப்பொழிவு அதிகம் உள்ளதாலும், கடும் குளிராலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவால் உருளை, கேரட் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் தற்பொழுது  விடுமுறையை கொண்டாட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிரின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு குளிரின் தாக்கம் கால தாமதமாக துவங்கியுள்ளது.

வழக்கத்தைவிட இந்த ஆண்டு பருவமழை அதிக அளவு பெய்ததால் நட்சத்திர ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கீழ்பூமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறைபனி கொட்ட துவங்கி, தற்போது அதிகமாக காணப்படுகிறது. கொடைக்கானல் ஏரிப்பகுதி மற்றும் மலைப்பகுதிகள் வெண்ணிற கம்பளம் விரித்ததை போல் காட்சியளிக்கிறது. இந்த உறைபனி தாக்கத்தால் ஏரியில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வெயில் வந்த பிறகே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஏரி பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகள் கடைகளை தாமதமாகவே திறந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு உறை பனி தாமதமாக துவங்கினாலும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடும் குளிருடன் பனிப் போர்வை போர்த்தியது போல் கொடைக்கானல் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் இதை கண்டு ரசித்து வருகின்றனர். ஆனால் இந்த கடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கொடைக்கானல் உள்ளூர் மக்கள் காலையில் இந்த பனி காரணமாக தாமதமாகவே தங்களது பணிகளை துவக்கி வருகின்றனர். அதுபோல மாலை நேரத்தில் விரைவில் தங்களது பணிகளை முடித்து விடுகின்றனர். முதியவர்கள் குளிரை தாங்க முடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி விட்டனர்.

பகலிலும் கம்பளி, ஜெர்கின், ஸ்வெட்டர், மப்ளர், கையுறைகள் அணிந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் வீடுகளில் ஹீட்டர் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தியும், பனியின் தாக்கத்தை சமாளித்து வருகின்றனர்.பனிப்பொழிவு அதிகமாக உள்ளதாலும், உறைபனி படிவதாலும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் பெருமளவில் பயிரிடப்பட்டு உள்ளன. மேல் மலைப்பகுதிகளில் வெள்ளைப்பூண்டு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன. உறைபனி காரணமாக பயிர்கள்ில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Related Stories:

>