மாநில விரோத போக்கை மத்திய அரசு தொடர்ந்தால் ரஷ்யா உடைந்தது போல் இந்தியா பல நாடுகளாக உடையும்': சிவசேனா கட்சி எச்சரிக்கை

டெல்லி: மாநில விரோத போக்கை மத்திய அரசு தொடர்ந்தால் ரஷ்யா உடைந்தது போல் இந்தியாவும் விரைவில் பல நாடுகளாக உடையும் என்று சிவசேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறவு மோசமாவதால் சோவியத், ரஷ்யா போல் இந்தியா துண்டு துண்டாக சிதறும் நாள் வெகுதொலைவில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான உறவு மிகவும் கவலை அளிக்கும் விதத்தில் இருந்து வருகிறது என்று அந்த தலையரங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதே நிலை நீட்டித்தால் ரஷ்யா போல் பல துண்டுகளாக இந்தியா சிதறி போவதற்கு நீண்ட காலம் ஆகாது என்று அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் மனைவிக்கு சட்டவிரோத பணபரிமாற்ற புகாரில் மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத், நாளை ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது. இது அவருக்கு அனுப்பப்பட்டுள்ள 3வது சம்மனாகும்.

பஞ்சாப், மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த 4355 கோடி மோசடியில் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்பது அமலாக்கத்துறையின் சந்தேகமாகும். பணப்பரிவர்த்தனை தொடர்பான உரிய ஆவணங்களுடன் வர்ஷா ராவத் நாளை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் அக்கட்சி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ள சஞ்சய், இதே நிலை தொடர்ந்தால் ரஷ்யா உடைந்தது போல் இந்தியாவும் பல நாடுகளாக விரைவில் உடையும் என்று எச்சரித்துள்ளார்.

Related Stories:

>