×

ஓசூர் அருகே சானமாவு வனத்தில் 60 யானைகள் தஞ்சம்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு ஒரே சமயத்தில் 60க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சமடைந்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 60க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று முன்தினம் இரவு சானமாவு வனப்பகுதிக்கு வந்து தஞ்சமடைந்துள்ளது. ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட யானைகள் சானமாவு வனப்பகுதியில், கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ள நிலையில், தற்போது இந்த யானை கூட்டம் 2 குழுக்களாக பிரிந்து கிராமத்தின் அருகே உள்ள ஓடைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகளை 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்த யானைகள், இரவு நேரங்களில் உணவு தேடி கிராமப்பகுதிகளில் வலம் வருவதால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பகல் நேரங்களில் விவசாய தோட்டங்களில் பாதுகாப்பாக இருக்கவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நடமாட வேண்டாம், வனத்திற்கு கால்நடை மேய்க்க செல்ல வேண்டாம், வாகனங்கள் இயக்கும்போது எச்சரிக்கையுடனும் இயக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : forest ,department ,Sanamavu ,Hosur , Elephants
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...