×

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில்  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா வைரஸ் வேகமாக மாநிலம் முழுவதும் பரவியது.

குறிப்பாக, ஒரு கட்டத்தில் தினமும் 8 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு இருந்தது. இது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு சுதாரித்து கொண்ட சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு மாநிலம் முழுவதும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.

இந்த சூழலில் உருமாற்றம் அடைந்த வீரியமிக்க கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவுவது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலக அளவில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து மீண்டும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விமான நிலையம் முழுவதும் சுகாதாரத்துறை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்கள் பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிறகே வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 12 மணியளவில் மாவட்ட கலெக்டர்கள் உடனும், தொடர்ந்து மருத்துவ நிபுனர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

இக்கூட்டத்தில் புதுவகை கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், பரிசோதனைகளை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. மேலும் ஜனவரி மாத ஊரடங்கு தளர்வுகள், வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவலால் பொதுமக்களுக்கான புதிய ஆலோசனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Chief Minister ,collectors ,experts , The Chief Minister today consulted with collectors and medical experts regarding the extension of the curfew
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...