×

மறைந்த கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பாருக்கு வளைகுடாவில் நினைவஞ்சலி

இஸ்லாமிய இலக்கியக் கழகத் துணைத் தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கச் செயற்குழு உறுப்பினர், தேர்ந்த மூத்த ஊடகவியலாளர், தெளிந்த ஒலிபரப்பாளர், ESPN செய்தி ஆசிரியர், சிறந்த விளையாட்டு வர்ணனையாளர், இறைத் தூதர் முஹம்மது (மொழியாக்கம்), காற்று வெளியினிலே, அழைத்தார் பிரபாகரன் முதலிய நூல்களை எழுதிய பன்னூலாசிரியர், இலண்டன் தமிழ் வானொலி விருது, இலங்கை அரசு விருது, அகில இந்திய வானொலியின் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற வாழ்நாள் சாதனையாளர்  சாத்தான்குளம் அல்ஹாஜ் அப்துல் ஜப்பார் அவர்கள் கடந்த 22/12/2020, செவ்வாய்க்கிழமை, காலை 8 மணி அளவில் சென்னையில் உள்ள தன் இல்லத்தில் இயற்கை எய்தினார்.

கிரிக்கெட் வர்ணனையாளராகத் தன் குரலாலும், தமிழ் மொழியின் இலாவகத்தாலும் உலகத் தமிழர்களின் பேராதரவையும், அன்பையும் பெற்று, வானொலி, பத்திரிக்கை,  செய்தி ஊடகத் துறையில் கடந்த எழுபதாண்டுகளாக இலங்கை, இலண்டன் மற்றும் சென்னையில் திறம்பட தன் ஆளுமையைச் செலுத்திய அல்ஹாஜ் அப்துல் ஜப்பார் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் துபாயில் 25/12/2020, மாலை 6 மணி அளவில் துபாயில் கிஸைஸ் பிளாசாவில் உள்ள ப்ரோஆக்டிவ் எக்சல் சேஃப்டி கன்சல்டன்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு சமூக ஆர்வலருமர் கல்லிடைக் குறிச்சி முகைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் லியாகத் அலி, தாஹா முஹம்மது, தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் அஷ்ரஃப் அலி,  ஈமான் கல்ச்சுரல் அமைப்பின் செயலாளர் ஹமீது யாசின், நஜீம், அமீரக திமுக செயலளார் முஸ்தபா, புதுக்கோட்டை மாவட்ட திமுக கவுன்சிலர் நஜீமுத்தீன், அமீரக மறுமலர்ச்சி பேரவை செயலாளர் பாலமுருகன், அமீரக விடுதலைச் சிறுத்தைகள்  கட்சித் தலைவர் அசோகன், முத்தமிழ் வளவன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த அப்துல் ஹாதி, மனிதநேய மக்கள் கட்சியின் இஸ்மாயில், அமீரக அமமுக நிர்வாகி அப்துர் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்களுடைய சமுதாயப் பணிகளையும்,

ஊடக ஆளுமைத் திறனையும், எழுத்துப் பணியையும் நினைவு கூர்ந்து, அவருடைய இழப்பு தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பாகவும், அந்த இடம் வெற்றிடமாக இருப்பதைக் குறித்தும் பேசினர்.அப்துல் ஜப்பார் அவர்களின் எழுபதாண்டு ஊடக அறிவையும், கூரிய பார்வையையும், அவருடைய எழுத்துக்களையும்  எதிர்கால சந்ததிக்குக் கடத்த வேண்டிய பொறுப்பையும் வலியுறுத்தினர். நிகழ்வில் ரிதம் ஈவெண்ட்ஸ் நிறுவனர் சபேசன், அமீரகத் தமிழ் மன்றத்தின் நிர்வாகி அகமது முகைதீன், கலை, பண்பாட்டு ஆர்வலர் வெங்கடேஷ் போன்றோரும் அப்துல் ஜப்பார் அவர்களுடனான தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்துல் ஜப்பார் அவர்களின் நினைவாற்றலும், கிரிக்கெட் மீதான அவரின் அறிவும் போற்றுதலுக்குரியதென்றும் பேசினர்.

துடிப்புமிக்க இளைஞரைப் போல் இறுதி மூச்சுள்ளவரை இயங்கிய பேராளுமை. கிரிக்கெட் வர்ணனையில் உச்சம் தொட்டவர். அழகுத் தமிழ் உச்சரிப்பால் அனைவர் மனதையும் கவர்ந்தவர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களால் ஈழத்திற்கு அழைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டவர். இறைத்தூதர் முஹம்மது நபிகளாரின் வரலாற்றை அழகுத் தமிழில் மொழிபெயர்த்து, ஒரு வாலிபனின் மிடுக்குடன் எதிர்கால நம்பிக்கைகளை தன் சந்ததிக்குக் கடத்திய பேராளுமை கொண்ட சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் புகழ் காலம் கடந்தும் வரலாற்றில் பேசப்படும் என்றும் குறிப்பிட்டனர். அவருடைய  மண்ணறை வெளிச்சம் பெறவும்,  மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் அருளப்படவும்,

அன்னாரது குடும்பத்தினருக்கு அழகிய பொறுமை நல்கப்படவும் இருகரமேந்தி இறைஞ்சுகிறோம் எனவும் பிரார்த்தனை செய்தனர். நிகழ்வின் இறுதியாக அப்துல் ஜப்பார் அவர்களின் மூத்த மகனும், எழுத்தாளருமான ஆசிப் மீரான் தன் தந்தையைக் குறித்தும், தந்தையுடனான தன்னுடைய புரிதல்களைக் குறித்தும் உணர்ச்சி பெருக்குடன் பேசினார். தந்தை இலங்கை வானொலியில் வானொலி நடிகராக சிறு வயதிலேயே பணிபுரிந்ததையும், அப்போது 300 ரூபாய் இலங்கைப் பணத்தை சம்பளமாக வைத்தே தன் கல்விக்காகச் செலவழித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். தந்தைக்காக தமிழக, இலங்கை அரசியல் தலைவர்கள், ஊடக ஆளுமைகள், கிரிக்கெட்,

வானொலி ரசிகர்களின் இரங்கல் குறிப்புகளைப் படித்த போது அவருடைய இத்தனை வருடப் பொது வாழ்வு அர்த்தமுள்ளதாக இருந்ததை உணர்ந்தவன் எனவும், வாழும் காலம் வரை ஒரு நண்பனைப் போல தன்னை வழிநடத்திய தந்தையின் வெளிவராத மொழிபெயர்ப்பு புத்தகத்தையும், தந்தையின் வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். நிகழ்வை பிலால் அலியார் சிறப்புற தொகுத்து வழங்கினார். நிகழ்விற்கான ஒருங்கிணைப்புகளை ஜெஸிலா பானு, பாலாஜி பாஸ்கரன் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.

Tags : Memorial ,Abdul Jabbar ,Gulf , Memorial to the late cricket commentator Abdul Jabbar in the Gulf
× RELATED சேலத்தில் வெயிலின் கொடுமையை விளக்க...