வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: 8 நிலையங்களில் தீவிர ஆய்வு

சென்னை: வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே நேற்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இவ்வழித்தடத்தில் உள்ள 8 நிலையங்களையும் அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்தனர். சென்னையில் 45 கி.மீ தூரத்திற்கு பச்சை மற்றும் நீள வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் விம்கோ நகர் இடையே 9 கி.மீ தூரத்தில் முதல் வழித்தட நீட்டிப்பு பணிகள் ரூ.3,370 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்தது. இப்பணி 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் இடையிலான பணிகள் 2019ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு 2020 ஜூலை மாதம் சேவை தொடங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் முடிக்க இயலவில்லை. பின்னர், கொரோனா ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததன் விளைவாக மெட்ரோ ரயில் நீட்டிப்பு பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வந்தது. 2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் ஜனவரி மாதத்திற்குள் சேவை தொடங்க வேண்டும் என தமிழக அரசு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தது.

இதையடுத்து, சிக்னல், தண்டவாளம் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. தற்போது 90 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே டீசல் ரயில் இன்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 9.051 கி.மீ தூரம் இன்ஜின் வெற்றிகரமாக இயக்கி பார்க்கப்பட்டது.

சிக்னல், சுரங்கப்பாதையில் காற்றோட்ட வசதி, நடைமேடை தானியங்கி கதவுகள், தானியங்கி டிக்கெட் எடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இவை விரைவில் முடிக்கப்பட்டுவிடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று 2 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும், 6 மேம்பால நிலையங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, வரும் ஜனவரி மாத இறுதிக்குள் சேவை தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>