×

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பிரிவை ரத்து செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை: தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவு பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நாடு சுதந்திரம் அடைந்தபோது கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 12 சதவீதமாக இருந்ததால், தேர்தல்களில் சின்னம் ஒதுக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

தற்போது 84 சதவீதம் கல்வியறிவு பெற்றவர்கள் உள்ள நிலையிலும் சின்னங்கள் ஒதுக்குவது தேவையற்றது. இந்தியாவில் சின்னங்கள் வழங்குவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்களை ஒதுக்குகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள், இதுபோல் நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யவில்லை.

மாறாக, சின்னங்கள் பட்டியலை வெளியிட்டு, அவற்றை ஒதுக்குவதற்கான விதிமுறைகளை வகுக்க அறிவுறுத்தியுள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை  செய்யும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் தங்கள் கட்சிக்கு பொது சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி தங்கள் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக அரசு பணத்தை செலவிடுவது என்பது ஊழல் நடவடிக்கை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : parties , Case seeking annulment of section allocating symbols to recognized political parties: Petition filed in iCourt
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...