×

பள்ளி மாணவி கடத்தல் புகார் கொடுத்து 15 நாட்களாக நடவடிக்கை எடுக்காத போலீசார்: மாதர் சங்கம் கண்டனம்

செங்கல்பட்டு: பள்ளி கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்து 15 நாட்களாகியும், போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மாதர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருமணி அடுத்த பாரதபுரத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். இவரது மனைவி குர்ஷித். கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். 10ம் வகுப்பு படிக்கிறார். தற்போது, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்று வருகிறார். கடந்த 13ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர்.

சிறுமி, வீட்டில் தனியாக இருந்தார். மாலை வேலை முடிந்து பெற்றோர் வீடு திரும்பியபோது, மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (35) என்பவர், சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது. ஆனால், புகார் கொடுத்து 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை சிறுமி மீட்கப்படவில்லை.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர், அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்க மாநில செயலாளர் பிரமிளா, மாவட்ட பொருளாளர் கலையரசி ஆகியோருடன், ஏஎஸ்பி ஆதர்ஷ் பச்சாராவை நேரில் சந்தித்து, சிறுமியை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று மனு அளித்தனர். இதுகுறித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் பிரமிளா கூறுகையில், புகார் அளித்து 15 நாட்கள் ஆகியும், போலீசார் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது. 15 நாட்களாக மீட்காமல் உள்ள சிறுமியின் நிலை குறித்து கொஞ்சமும் போலீசார் கவலைப்படாமல் உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளியை  போக்சோ சட்டத்தில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Mather Association ,school student abduction complaint , Police do not take action for 15 days after school student abduction complaint: Mather Association condemned
× RELATED ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இருசக்கர வாகன பேரணி