×

தமிழக பாஜ தலைவர்களை தொடர்ந்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மத்திய அமைச்சரும் மறுப்பு: டெல்லி மேலிடம் அறிவிக்கும் என்று பேட்டி: கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர்களை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மறுத்துள்ளார். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை டெல்லி மேலிடம் தான் அறிவிக்கும்  என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சால் அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு வெடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,  அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்னை பூதாகரமாக வெடித்தது. காரணம், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஓ.பி.எஸ். மறுத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பலக்கட்டமாக ஓ.பி.எஸிடம் பேச்சுவார்த்தை  நடத்தி, எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க அவர் சம்மதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அதிமுக நிர்வாகிகளால் ஏற்று கொள்ளப்பட்டார்.

ஆனால், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மற்ற தலைவர்களும் அதிமுக வேண்டுமென்றால், “முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கலாம். எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ேதசிய  ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை டெல்லி பாஜ மேலிடம் தான் அறிவிக்கும். அதிமுகவால் அறிவிக்க முடியாது’ என்று தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இன்று வரை எடப்பாடி பழனிச்சாமியை எந்த இடத்திலும்  பாஜகவினர் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல் அதிமுக ஊழல் நிறைந்த கட்சி என்றும் சில பாஜ தலைவர்கள் நேரடியாக குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர். இதனால், அதிமுக கூட்டணியில்  தொடர்ந்து ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்து வருகிறது. பாஜகவினர் இவ்வாறு கூறி வரும் நிலையில் அதற்கு அதிமுக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று  சென்னை வந்தார். அவர் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பாஜ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து அவர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் “புதிய  இந்தியா செய்திகள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு” என்ற  புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் நிருபர்களுக்கு பிரகாஷ்  ஜவடேகர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பீகாரில் 3வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல ராஜஸ்தான்,  ஜம்மு காஷ்மீர், ஐதராபாத், மத்திய பிரதேசம், அருணாசலபிரதேசம், குஜராத்   உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் கணிசமான இடங்களில் பாஜ வெற்றியை  பெற்றுள்ளது. தனது ஆட்சி முறையால் காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலங்களாக இழந்து வருகிறது. வெற்றிகளை குவித்து பாஜ எழுச்சி அடைந்து வருகிறது.   தமிழ்நாட்டில் வர உள்ள சட்டசபை தேர்தலிலும் பாஜ தேசிய ஜனநாயக கூட்டணி  சிறப்பான வெற்றியைப் பெறும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நிருபர்கள், ”தேசிய ஜனநாயக  கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா?  என்று கேள்வி  எழுப்பினர். அதற்கு பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்கவில்லை. தொடர்ச்சியாக  நிருபர்கள் இந்த கேள்வியை கேட்டனர்.

அதற்கும் அவர் பதில் எதுவும்  அளிக்கவில்லை. தொடர்ந்து அவர், “எங்களது கட்சிக்கு என சில வழிமுறைகள்  உள்ளன. அதன்படி கட்சியின் தலைமை தான் அனைத்தையும் அறிவிக்கும். அதை தான்  மாநில தலைவர் எல்.முருகன்  தெரிவித்திருக்கிறார். ஒரு கூட்டணி என்று இருந்தால், அதில்  ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் என்பது இயல்பு. அதிமுக-பாஜ கூட்டணியில் மட்டுமல்ல.  எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே   இருக்க வேண்டும்’ என்று பதில் அளித்தார். மத்திய அமைச்சரின் இந்த பேட்டி அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். அப்படியிருக்கும் போது தமிழகத்தில்  உள்ள பாஜ தலைவர்கள் ஆளு,ஆளுக்கு ஒரு கருத்தை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சரும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். பாஜகவினரின் இது போன்ற பேச்சுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அவர்களை கூட்டணியில் இருந்து கழற்றி விட  வேண்டும். பாஜகவினர் கூட்டணியில் இருந்தாலும் ஓன்று தான், இல்லாமல் இருந்ததாலும் ஒன்று தான். அவர்களை ஏன் நாம் தாங்க வேண்டும் என்ற நிலைக்கு அதிமுகவினர் வந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.



Tags : Union Minister ,Chief Ministerial ,candidate ,Edappadi ,leaders ,BJP ,Tamil Nadu , Union Minister refuses to accept Edappadi as Chief Ministerial candidate following Tamil Nadu BJP leaders: Interview that Delhi will announce above
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...