மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் எழும்பூர்-மதுரை தேஜஸ் ரயில் ஜனவரி 4ம் தேதி முதல் ரத்து

சென்னை: எழும்பூர்- மதுரை இடையே இயக்கப்பட்ட தேஜஸ் ரயிலுக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் வரும் ஜனவரி 4ம் முதல் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை-சென்னைக்கு 6.30 மணி நேரத்தில்  செல்லும் வகையில் பகல்நேர ‘தேஜஸ்’ சொகுசு ரயிலை பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் தேஜஸ்  ரயில் இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும். மறு மார்க்கத்தில் தினமும் காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு மதுரை சென்றடையும். கொடைரோடு, திருச்சி ரயில்  நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மொத்தம் 13 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

56 பேர் பயணிக்கும் உயர்ரக குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டி ஒன்றும், தலா 78 பேர் பயணிக்கும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட 12 பெட்டிகளும் இடம் பெற்றுள்ளன. அனைத்துப் பெட்டிகளிலும் சிறப்பான உணவக வசதி  உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முன்பதிவு செய்வது போல இந்த ரயிலுக்கும் முன்பதிவு செய்யலாம். உயர்தர ஏசி பெட்டியில் பயணிக்க சைவ, அசைவ உணவுகளுடன் தலா ஒருவருக்கு கட்டணம் ரூ. 2295, உணவு இன்றி ரூ.1940. ஏசி பெட்டியில்  உணவுடன் தலா ஒருவருக்கு ரூ.1195. உணவின்றி பயணிக்க ரூ.895 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

மற்ற ரயில்களை விட டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் இந்த ரயில்களுக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனால் தேஜஸ் ரயிலை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி வரும் ஜனவரி 4ம் தேதி முதல்  தேஜஸ் ரயில் (02613, 02614) ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் முறையான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>