வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி: டிராவல்ஸ் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

வேளச்சேரி: தரமணியை சேர்ந்த வள்ளி (55), தனது மகனுக்கு வெளிநாட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில், மலேசியாவில் வேலை வாங்கி தரப்படும், என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். எதிர்முனையில், பேசிய நபர், பாஸ்போர்ட் மற்றும் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க முன்பணம் ரூ.47 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அதன்பேரில், அவர்களது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார். அதன்பிறகு, அந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது, சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமிடம் வள்ளி புகாரளித்தார்.

அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார், செல்போன் எண் மற்றும் பணம் செலுத்திய வங்கி கணக்கு ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, கடலூரைச் சேர்ந்த மணிமாறன் (50), சிவானந்தத்துடன் (39) சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் எஸ்எஸ்ஆர் நகரில் சங்கரா தேவி டிராவல்ஸ் மற்றும் கன்சல்டன்சி என்ற பெயரில் 2012ம் ஆண்டு முதல் நிறுவனம் நடத்தி, பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கார், 2 கம்ப்யூட்டர், 3 தொலைபேசிகள், 1 ஸ்வைப்பிங் மெஷின், 20 பாஸ்போர்ட்கள், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், இருவர் மீதும் மீது வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>