வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம்: வீட்டின், கதவு, ஜன்னலை உடைத்து நொறுக்கியது

வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை அடுத்து பெரியகல்லாறு எஸ்டேட் உள்ளது. தமிழக அரசு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட்டில்(டேன்டீ) ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சுந்தரலிங்கம் (50). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார்.

திடீரென அதிகாலை நேரத்தில் வீட்டை இடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது, வீட்டிற்கு பின் பக்கம் 2 யானைகள் கதவு மற்றும் ஜன்னலை இடித்துக் கொண்டிருந்தது கண்டு அதிர்ந்தார். பின்னர் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று பதுங்கி உயிர் பிழைக்க முயன்றார். இதையறிந்த யானைகள் அவர் பதுங்கும் ஒவ்வொரு அறையிலும், இருந்த ஜன்னல்களை உடைத்து அவரை தாக்க முற்பட்டுள்ளது.வீட்டிற்குள் இருந்த டிவி, கட்டில், துணி, அடுப்பு, கிரைண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் யானைகள் உடைத்து நொறுக்கியது. ஒருகட்டத்தில் பரண் மீது ஏறி தப்பிக்கு முயன்ற அவரின் காலை இழுத்து தள்ளிவிட்டதால் 11 அடி உயர பரண் மீது இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவம் அறிந்த எஸ்டேட் காவலர் யானைகளை விரட்டி சுந்தரலிங்கத்தை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று உள்ளார். சம்பவம் அறிந்த மானம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் ஆய்வு செய்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பெரியகல்லார் எஸ்டேட்டிற்கு கூடுதல் பணியாளர்களை அமர்த்தியுள்ளார்.

Related Stories:

>