×

துமகூரு கங்கோதனஹள்ளியில் 5 திருநங்கைகள் சேர்ந்து தொடங்கிய ஆதரவற்றோர் இல்லம்

துமகூரு: தும்கூரு டோல்கேட் அருகே உள்ள கங்கோதனஹள்ளியில் 5 திருநங்கைகள் இணைந்து, தங்களின் சொந்த முயற்சியில் ஆதரவற்றோர் இல்லம் துவக்கியுள்ளனர். துமகூருவை சேர்ந்தவர்கள், நட்சத்ரா (22),மைலானா (30),ரேஷ்மா (38), சவுந்தர்யா (30) மற்றும் தனு (35). திருநங்கைகளான இவர்களை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததால், வீட்டில் இருந்து வெளிவந்து  சிரமங்களை சந்தித்து தங்களின் வாழ்க்கையை வாழ்ந்தனர். மேலும் திருநங்கைகள் எனில் பிச்சை எடுத்தல் மற்றும் தவறான தொழில் செய்து பிழைப்பவர்கள் என்ற பொது எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக அயராது உழைத்து தற்போது அழகுகலை நிபுணராகவும், டைலராகவும் மாநகராட்சியின் தன்னார்வலராகவும் பணி புரிந்து வருகின்றனர். இதுகுறித்து என்ஜிஓவில் பணி புரியும் மைலானா கூறியதாவது: எங்களின் வாழ்க்கையில் அதிகபடியான கஷ்டங்களை சந்தித்து வந்துள்ளோம். தற்போது சில பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளின் நலனை உணர்ந்து மூன்றாம் இனத்தினரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால் பலர் அவ்வாறு இருப்பதில்லை. எனவே நாங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழவேண்டும் என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டோம். அதற்காக பெற்றோர்களால் தவிக்கவிடப்பட்ட மேலும் எங்களை போன்ற மூன்றாம்பாலினத்தை சேர்ந்த குழந்தைகளுக்காக ஒரு இல்லம் அமைக்க வேண்டும் என நினைத்தோம். அதற்காக இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளோம் ஒன்று ஆண்களுக்கு மற்றொன்று பெண்களுக்கு.  எங்களின் ஆதரவில் தற்போது 8 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் யாரும் மூன்றாம் பாலினத்தினர் இல்லை. மேலும், மூன்றாம் பாலினத்தினர் தங்களின் இனத்தவருடன் தங்கிக்கொள்ளலாம். தொடர்ந்து நாங்கள் இவர்களின் கல்விக்காக அருகில் உள்ள தனியார் பள்ளியிடம் கேட்டோம் அதற்கு அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். யாராக இருந்தாலும் எங்களின் இல்லத்திற்கு வரலாம் என்றார். இவரைத்தொடர்ந்து நட்சத்ரா கூறுகையில், தெருவில் வசிப்பது மிகவும் கடினம். நான் 16 வயதில் இருந்தபோது என்னை பெண்ணாக உணர்ந்தேன்.

அதை எனது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால், வீட்டில் இருந்து வெளியில் வந்தேன். தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவர் வகுப்பில் இணைந்தேன். நன்றாக படித்து மாநகராட்சியின் தன்னார்வ அமைப்பில் தற்போது பணியாற்றி வருகிறேன். மேலும்  நான் சட்டப்படி திருமணம் செய்துள்ளேன். அதேபோன்று ஒரு குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்துவருகிறேன்.  எனக்கு ஒரு ஆதரவற்றோர் இல்லம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கேற்றார்போல் மற்றவர்களுக்கும் தோன்றியதால் நாங்கள் அனைவரும் இணைந்து இந்த இல்லத்தை ஆரம்பித்தோம்.  இல்லம் அமைப்பதற்கு நாங்கள் பல இடங்களில் வாடகைக்கு வீடு தேடியும் கிடைக்கவில்லை. ஒருவர் ஆரம்பத்தில் சரி என கூறினார்.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்த போது அவர் திடீரென மறுப்பு தெரிவித்து வீட்டை காலி செய்யும் படி கூறிவிட்டார். தொடர்ந்து மற்றொரு வீட்டை தேடினோம் அப்போது லட்சுமி என்பவரிடம் இதுகுறித்து கூறியதும் அவர் மகிழ்ச்சியுடன் வீட்டை வாடகைக்கு கொடுத்தார். மேலும் வாடகையையும் குறைத்துக்கொண்டார்.




Tags : Tumkur Gangodanahalli ,home , Tumkur Gangodanahalli is a home for the helpless who started with 5 transgender people
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...